பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான வாட்டர் மிலான் ஸ்டார் திவாகர், அதன் பிறகு ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் அதிக கவனம் பெற்றார். பிக் பாஸ் பிந்தைய காலத்தில் சினிமா மற்றும் பல நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “குக் வித் கோமாளி” சீசன் 7 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ள திவாகர் சென்றிருந்தார். அங்கு நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திவாகர் அளித்த பேட்டியில், நிகழ்ச்சி செட்டில் மாகாபா ஆனந்த், கானா வினோத், புகழ் ஆகியோர் மது அருந்திய நிலையில் தன்னை தாக்கியதாக கூறினார். மேலும், புகழ் தன்னை விரும்பாமல் தொடர்ந்து அவமதித்து பேசியதாகவும், தனது குடும்பத்தை பற்றியும் தவறாக பேசியதாகவும் குற்றம்சாட்டினார். இதற்கிடையில், தன்னை இரும்புக் கம்பியால் காலில் அடித்ததாகவும், அதனால் தான் போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, கானா வினோத், மாகாபா ஆனந்த், புகழ் ஆகியோர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திவாகர் தான் செட்டில் பெண்களிடம் மிகவும் தவறாக நடந்துகொண்டதாக கூறினர். மேலும், அவரது ஒழுங்கற்ற நடத்தை காரணமாகவே சேனல் நிர்வாகம் அவரை நிகழ்ச்சியிலிருந்து நீக்கியதாகவும் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது, திவாகர் விஜய் டிவி சீரியல் நடிகைகளிடமும் மரியாதையற்ற முறையில் பேசியதாகவும், ஒரு கணவன் முன்னிலையில் அவரது மனைவியின் தோளில் கை வைத்து தகாத வார்த்தைகள் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், ஜாதி தொடர்பான கருத்துகள் மற்றும் ஆபாச பேச்சுகளிலும் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர். இதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன; நாங்கள் யாரையும் மது அருந்தி தாக்கவில்லை என்றும் விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், நிஷா வெளியிட்ட வீடியோவில் திவாகர் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என கூறப்பட்டுள்ளது. அதில், “திவாகர் எனக்கு கோமாளியாக வந்தவர். ஆனால் அவர் என் தோளில் கை வைத்து மிகவும் தவறாக பேசினார். சுனிதாவிடமும் கடுமையாக கத்தி பேசியார்” என்று நிஷா தெரிவித்துள்ளார்.