கிருஷ்ணகிரி மாவட்டம் பாலகுறி பகுதியில் நடந்த இரட்டை கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரர் மகேஷ் குமார் மற்றும் அவரது தந்தை செல்லப்பன் கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் மனைவி மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலகுறி பகுதியைச் சேர்ந்த மகேஷ் குமார் (32) இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் ஜம்மு காஷ்மீரில் பணியில் இருந்த நிலையில், அவரது மனைவி பானுப்பிரியா (32), இரண்டு மகன்கள் மற்றும் மாமனார் செல்லப்பன், மாமியார் காளியம்மாளுடன் கிராமத்தில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பூவரசன் (24) என்பவருடன் பானுப்பிரியாவுக்கு நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் பின்னர் திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
இருவரும் அடிக்கடி ஒன்றாகச் சுற்றிவந்ததை கவனித்த உறவினர்கள், இதுகுறித்து மகேஷ் குமாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பிறகு விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகேஷ் குமார், மனைவியின் செல்போனை சோதனை செய்தபோது சந்தேகத்திற்கு இடமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடந்த அன்று இரவும் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வந்த பூவரசன், மகேஷ் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர் ஏற்பட்ட மோதலில், வீட்டில் இருந்த கத்தியால் மகேஷ் குமாரை குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சத்தம் கேட்டு வந்த மகேஷ் குமாரின் தந்தை செல்லப்பனையும் பூவரசன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவரும் உயிரிழந்தார்.
கொலை சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றவாளிகள், இருவரின் உடல்களையும் பெட்ஷீட்டில் சுற்றி வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று தீ வைத்து எரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அருகிலுள்ள பகுதிகளில் எரிந்த நிலையில் கிடந்த உடல்களை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பானுப்பிரியா மற்றும் பூவரசன் இடையேயான உறவு, அதனால் ஏற்பட்ட மோதல் மற்றும் இரட்டை கொலை சம்பவம் உறுதியானதைத் தொடர்ந்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் நடந்தபோது பானுப்பிரியாவின் 10 வயது மகனும் உடந்தையாக இருந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.