தமிழ் சினிமாவில் அரசியல் நையாண்டி படங்களுக்குள் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள படம் ‘அமைதிப்படை’. இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில், சத்யராஜ் நடித்த இந்த படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
இந்தப் படத்தில் சத்யராஜ் நடித்த ‘அமாவாசை’ கதாபாத்திரம் எவ்வளவு பிரபலமோ, அதேபோல் சில நிமிடங்களே திரையில் தோன்றியிருந்தாலும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஜெயா வாகினி.
ஓட்டு எண்ணிக்கை காட்சியில் “ராஜராஜசோழன் எம்.ஏ” என்று பெயரை மாற்றிக்கொண்டு அமாவாசை செய்யும் காமெடி இன்றும் மீம்ஸ்களில் வைரலாகிறது. அதே காட்சியில் மணிவண்ணனின் காதலியாக தோன்றி, சத்யராஜ் “பட்டா… தள்ளி நில்லு” என்று கூறும் அந்த ஒரு தருணத்திலேயே வாகினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
ஆந்திராவைச் சேர்ந்த வாகினி, தமிழில் குறைந்த அளவில் நடித்திருந்தாலும் தெலுங்கு திரையுலகிலும் சின்னத்திரையிலும் மிகவும் பிஸியான நடிகையாக இருந்தார். குறிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
2019-ம் ஆண்டு வெளியான ‘ரகுபதி வெங்கையா நாயுடு’ திரைப்படத்தில் வி.கே. நரேஷுடன் இணைந்து நடித்த அவரது பாத்திரம், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தியது.
இவ்வாறு பிஸியாக இருந்த அவரது வாழ்க்கையை மார்பகப் புற்றுநோய் முற்றிலும் மாற்றிப் போட்டது. நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், நோயின் தாக்கத்தால் உடல் மெலிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார். சிகிச்சைக்காக தலைமுடியையும் இழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்த அவரது புகைப்படங்கள் பலரையும் கண்கலங்க வைத்தன.
அவரது சிகிச்சைக்காக சுமார் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகியதாக கூறப்படுகிறது. பொருளாதார சிரமங்களுடனும் நோயின் தீவிரத்துடனும் போராடிய அவர், இறுதியில் சிகிச்சை பலனின்றி இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்தச் செய்தி, அவரது தோழியும் நடிகையுமான கராட்சே கல்யாணி சமூக வலைதளங்களில் பகிர்ந்ததன் மூலம் தான் வெளியில் வந்தது. “வாகினியை காப்பாற்ற பல முயற்சிகள் எடுத்தோம், ஆனால் முடியவில்லை” என்று அவர் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
30 ஆண்டுகளுக்கு பிறகும் ‘அமைதிப்படை’ படம் புதிய தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் இந்த நேரத்தில், அதில் நடித்த ஒரு நடிகையின் இத்தகைய துயரமான முடிவு, திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.