ஆந்திரப் பிரதேசத்தின் மார்க்கபுரம் மாவட்டத்தில் உள்ள யெர்ரகோண்டபாலம் பகுதியில், 21 வயது இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு ஆழ்துளை கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவர் ஆஞ்சநேயலு (21). யெர்ரகோண்டபாலம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த இவர், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால், அக்கா மற்றும் மாமாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
ஆஞ்சநேயலுவுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். இதற்காக கடந்த மே 13-ஆம் தேதி, அவரை பெண் பார்க்க அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. பெண் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில், “சிறிய வேலை இருக்கிறது” என்று கூறிவிட்டு ஆஞ்சநேயலு தனியாக சென்றுள்ளார்.

அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கடந்தும் தகவல் எதுவும் கிடைக்காததால், அவரது அக்கா மற்றும் உறவினர்கள் யெர்ரகோண்டபாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். ஆஞ்சநேயலுவின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது, அது பொட்டிரெட்டிபல்லி பகுதியைக் காட்டியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. 15 வயது சிறுமியுடன் ஆஞ்சநேயலு காதல் உறவில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். சம்பவம் நடந்த இரவு, சிறுமி தனது பெற்றோர் வீட்டில் இல்லை என்று கூறி ஆஞ்சநேயலுவை வீட்டிற்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
இரவு நேரத்தில் ஆஞ்சநேயலு அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் தனியாக இருந்ததாகவும், எதிர்பாராத விதமாக சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை, அருகில் இருந்த இரும்புக் கம்பியால் ஆஞ்சநேயலுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சம்பவத்தை மறைக்க முயன்ற பெற்றோர், உடலை துண்டு துண்டாக வெட்டி, அருகிலிருந்த ஆழ்துளை கிணற்றில் வீசியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கில் சிறுமியின் தந்தை வெங்கட்ராமன், தாய் ரமணா மற்றும் 15 வயது சிறுமி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆழ்துளை கிணற்றிலிருந்து உடல் பாகங்களை மீட்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் யெர்ரகோண்டபாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.