திருநெல்வேலி டவுன் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் தனியுரிமையை மீறும் வகையில் ரகசியமாக வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் மகரஜோதி (39). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த மகரஜோதி, திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையில், கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒருவருடன் மகரஜோதிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும், இருவரும் தொடர்ந்து செல்போன் மூலம் தொடர்பில் இருந்து வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விடுதியில் தங்கியிருந்த மற்ற பெண்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாக பதிவு செய்து அனுப்பியதாக மகரஜோதி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மகரஜோதியின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சிலர், அவரை கவனித்தபோது மறைமுகமாக வீடியோ பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் விடுதி காப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மகரஜோதி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோயம்புத்தூர் நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் பெண்கள் விடுதிகளில் தங்கியுள்ள மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களிடையே பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் தங்கும் விடுதிகள் மற்றும் தங்கும் வசதிகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், தனியுரிமை மீறல்களைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.