ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. நாடையே அதிரவைத்த கூட்டு பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் 2012-ம் ஆண்டு நடந்த நிர்பயா கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதே நகரில் மீண்டும் பெண்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் 30 வயது திருமணமான பெண் ஒருவர் இரு பேருந்து ஊழியர்களால் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

என்ன நடந்தது?

டெல்லியின் பிதம்புறா பகுதியில் வசித்து வரும் 30 வயது பெண் ஒருவர், மங்கோல்புரியில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். திருமணமான இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

கடந்த மே 11-ம் தேதி இரவு, வேலை முடித்து வீடு திரும்புவதற்காக சரஸ்வதி விகார் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆரஞ்சு நிற ஸ்லீப்பர் பேருந்தின் அருகே நின்றிருந்த நபரிடம் நேரம் கேட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில், அந்த நபர் திடீரென பெண்ணை பேருந்துக்குள் இழுத்துச் சென்றதாகவும், பின்னர் மற்றொருவர் பேருந்தை நங்குலோய் பகுதியை நோக்கி இயக்கியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், ஓடும் பேருந்துக்குள் இருவரும் மாறி மாறி அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலீசில் புகார்

சம்பவத்திற்குப் பிறகு, மே 12-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையை தொடங்கினர்.

விசாரணையின் அடிப்படையில் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் போலீசார் சில மணி நேர இடைவெளியில் கைது செய்தனர். மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்தது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட பேருந்து, பரிதாபாத்தைச் சேர்ந்த “ராயல் டிராவல்ஸ் அண்ட் கார்கோ” நிறுவனத்துக்குச் சொந்தமானது என்றும், அந்த பேருந்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் கட்சிகள் கண்டனம்

இந்த சம்பவம் டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மனீஷ் சிசோடியா தனது சமூக வலைதள பதிவில்,

“டெல்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம். பெண்களுக்கு பள்ளியிலும் பாதுகாப்பு இல்லை, பேருந்திலும் பாதுகாப்பு இல்லை”

என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், ஆம் ஆத்மி தலைவர் சௌரவ் பரத்வாஜ் தனது எக்ஸ் பதிவில்,

“பெரும் அவமானம். நேரம் கேட்கச் சென்ற 30 வயது பெண் பேருந்தில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார்”

என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீண்டும் எழும் பாதுகாப்பு கேள்வி

2012-ம் ஆண்டு நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு சட்ட மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், 14 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு பெண், பொதுப் பேருந்து நிறுத்தத்திலேயே கடத்தப்பட்டு வன்கொடுமைக்கு உள்ளானதாக கூறப்படும் இந்த சம்பவம், டெல்லி நகரின் பெண்கள் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் இரவு நேர போக்குவரத்து கண்காணிப்பு குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்த வழக்கில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமூக அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Check Also

மாணவன் உயிரிழப்பு வழக்கில் அதிர்ச்சி திருப்பம்.. ஆசிரியைகள் பேசிய ஆடியோ வைரல்!

கொல்கத்தாவில் உள்ள ஒரு பிரபல கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்து வந்த 20 வயது மாணவர் அரவிந்தின் மரணம், …