Krishnagiri : சமூக வலைதளத்தின் மூலம் சிறுமியை மிரட்டி தனிப்பட்ட புகைப்படங்களைப் பெற்று பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், 9ஆம் வகுப்பு படிக்கும் மூன்று பள்ளி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலீஸ் தகவலின்படி, ராயக்கோட்டை சாலை அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த சிறுமி, இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான போலி கணக்கின் மூலம் மிரட்டலுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.
விசாரணையில், கீழ்தளத்தில் வசித்து வந்த 14 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் சேர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் முதலில் சிறுமியின் சமூக வலைதள கணக்கை கண்டுபிடித்து, போலியான இன்ஸ்டாகிராம் ஐடியை உருவாக்கி நட்பாக பேசியுள்ளனர்.
பின்னர், “உங்கள் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் எங்களிடம் உள்ளன” என்று கூறி பயமுறுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், ஏற்கெனவே சமூக வலைதளங்களில் இருந்த புகைப்படங்களை மாற்றியமைத்து அனுப்பி, அவற்றை வெளியிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனால் பயந்துபோன சிறுமி, அவர்களிடம் சில தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு, அந்தப் புகைப்படங்களை சிறுமியின் தந்தைக்கு அனுப்பி, “பணம் கொடுக்காவிட்டால் சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவோம்” என்று மிரட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மூன்று மாணவர்களையும் கைது செய்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். “சிறுவர்கள் அதிக நேரம் சமூக வலைதளங்களில் செலவழிப்பது மற்றும் கட்டுப்பாடற்ற மொபைல் பயன்பாடு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்துகிறது” என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் இணைய பயன்பாடு, சமூக வலைதள செயல்பாடுகள் மற்றும் நண்பர்கள் வட்டத்தை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும், இணைய பாதுகாப்பு குறித்து சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.