“போலீஸ் ஆக ஆசைப்பட்ட இளம்பெண்… 6 மாதங்களுக்கு பிறகு வெளிவந்த பகீர் உண்மை! கருகிய உடல் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்!”

புதுக்கோட்டை மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியின் மொபைல் பயன்பாட்டில் ஏற்பட்ட சந்தேகமே இந்த கொலைக்குக் காரணமாக இருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரம் அருகே உள்ள புது விடுதி பகுதியைச் சேர்ந்த முருகேசன் (33) விவசாயக் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி ஆஷா (28) என்பவரை திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

கடந்த நவம்பர் மாதம் ஆஷா வீட்டில் கருகிய நிலையில் உயிரிழந்தார். சம்பவத்தின்போது வேலை முடித்து வீட்டுக்கு வந்த முருகேசன், மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறி உறவினர்களிடம் கதறி அழுததாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கினர். ஆரம்பத்தில் இது தற்கொலை என கருதப்பட்ட நிலையில், ஆஷாவின் தாயார் தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து ஆலங்குடி டிஎஸ்பி மனோகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது முருகேசன் அளித்த தகவல்களில் முரண்பாடு இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆஷா போலீஸ் பணியில் சேர வேண்டும் என்ற ஆசையில் இணையத்தில் அதிக நேரம் செலவழித்து வந்ததாக தெரியவந்தது. இதனால் கணவன்-மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் சந்தேகத்தின் காரணமாக முருகேசன், மனைவியின் செல்போனை உடைத்ததாகவும், அதன் பிறகு ஆஷா கணவரின் மொபைலை பயன்படுத்தி வந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த நாளில், ஆஷா மொபைல் பயன்படுத்திக் கொண்டிருந்ததை கண்டு மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதில் முருகேசன் ஆஷாவை தாக்கியதாகவும், அப்போது அவரது தலை சுவரில் மோதி மயங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னரும் ஆத்திரம் அடங்காத முருகேசன், ஆஷாவின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சம்பவத்தை தற்கொலை போல காட்டும் நோக்கில், உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துக்குப் பிறகு வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்குச் சென்ற முருகேசன், மாலை திரும்பி வந்து மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகம் ஆடியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து முருகேசனை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Check Also

“உடலுறவில் பெண்கள் உண்மையில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? இளம்பெண்களின் ஓப்பன் பதில்கள் வைரல்!”

மும்பையில் இளம் பெண்களிடம் திறந்தவெளி கேள்விகளை எழுப்பி சமூக ஊடகங்களில் கவனம் பெற்று வரும் பிரபல பெண் யூடியூபர் ஒருவர் …