சென்னை : தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிரான உடல் அவமதிப்பு மற்றும் தனிப்பட்ட கேள்விகள் குறித்து திறந்தவெளியில் கருத்து தெரிவித்த நடிகை கௌரி கிஷன், தற்போது தானே ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி எழுப்பியதாக சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பரில் வெளியான ‘Others’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் ஆதித்யா மாதவனிடம் ஒரு யூடியூபர், “ஹீரோயினை தூக்கினீங்களே… அவங்க எவ்வளவு வெயிட்?” என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த கௌரி கிஷன், “ஒரு நடிகையின் உடல் எடையை வைத்து கேள்வி கேட்பது தேவையற்றது. இது body shaming ஆக பார்க்கப்படுகிறது” என்று கடுமையாக பதிலளித்தார். அவரது இந்த நிலைப்பாட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். சமூக வலைதளங்களிலும், திரைப்பட துறையினரிடையிலும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.

ஆனால் தற்போது, மாயா எஸ். கிருஷ்ணன் நடத்தும் யூடியூப் பேட்டியில் கௌரி கிஷன் கேட்டதாக கூறப்படும் ஒரு கேள்வி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேட்டியின் போது, “உன் body count எத்தனை?” என்று மாயாவிடம் கேட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்த கேள்வி தனிப்பட்ட உறவுகள் மற்றும் பாலியல் வாழ்க்கையை குறிக்கும் வகையில் இருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து, “ஒரு காலத்தில் தனிப்பட்ட கேள்விகளுக்கு எதிராக பேசியவர், இப்போது அதேபோன்ற கேள்வியை மற்றொருவரிடம் கேட்பது ஏன்?” என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவாகி வருகின்றன. “அப்போது body shamingக்கு எதிராக பேசியவர், இன்று மற்றொரு பெண்ணிடம் இப்படி கேட்பது சரியா?” என்றும், “பொது மேடைகளில் கேள்விகளுக்கான எல்லை எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும்” என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கௌரி கிஷன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மாயா கிருஷ்ணனும் இந்த விவகாரம் குறித்து விரிவாக கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவம், பிரபலங்களின் தனிப்பட்ட கேள்விகள், பேட்டிகளின் எல்லைகள், மற்றும் சமூக வலைதளங்களில் நிலைத்தன்மையான கருத்து நிலைப்பாடு குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.