
சென்னை புறநகர் பகுதியில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் தாமதமாக இயங்கி வருவதால் காலையில் பணிக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் தற்போது பனிக்காலம் நிலவி வருகிறது. இரவு முதல் அதிகாலை வரை பனியால் மக்கள் குளிரில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பனி மூட்டம் நிலவியது.
குறிப்பாக சென்னை புறநகர் பகுதிகளான கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, ஊரப்பாக்கம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் கடும் பனிமூட்டம் என்பது நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி பயணித்து வருகின்றனர். காலை 7.30 மணியாகியும் பனி மூட்டம் குறையவில்லை. இதனால் செங்கல்பட்டு – சென்னை இடையேயான புறநகர் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடும் பனி மூட்டம் காரணமாக மின்சார ரயில்கள் தாமதமாக புறப்பட்டு சென்று வருகின்றன. இதனால் செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு காலையில் வேலைக்கு செல்லும் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு உள்ளனர்.
அதேபோல் தென்மாவட்டங்களில் இருந்து விரைவு ரயில்கள் அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை தாமதமாக இயங்கி வருகின்றனர். பொதிகை எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக செல்கிறது. பனி மூட்டம் அதிகம் இருப்பதால் ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க அதிகாரிகள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் காலதாமதமாக இயங்கி வருகிறது.