
பல்வேறு மோசடி வழக்குகளில் கைதாகி சிறையில் இருக்கும் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், காதலர் தினத்தையொட்டி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு ஜெட் விமானத்தை பரிசளித்துஉள்ளதாக கூறி உள்ளார்.பணம் கேட்டு மிரட்டல், இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதற்கு லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டில்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர், பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசை காதலிப்பதாகக் கூறி வருகிறார். மேலும், அவருடன் எடுத்த புகைப்படங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார்.ஆனால் இதை, நடிகை ஜாக்குலின் திட்டவட்டமாக மறுத்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு, சுகேஷ் சந்திரசேகர் அவ்வப்போது கடிதம் எழுதி வருகிறார்.
இந்நிலையில், காதலர் தினத்தையொட்டி, நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு, சுகேஷ் சந்திரசேகர் நேற்று எழுதிய கடிதம்: படப்பிடிப்புக்காக நீ உலகம் முழுதும் செல்கிறாய். உன் பயணத்தை எளிதாக்க, ‘கல்ப்ஸ்ட்ரீம்’ ஜெட் விமானத்தை பரிசளிக்கிறேன். இந்த விமானத்தின் முதல் எழுத்து, உன் பெயரிலேயே இருக்கும்.மேலும், உன் பிறந்த தேதி தான் விமானத்தின் பதிவெண்.இந்த காதலர் தினத்தன்று எனக்கு ஒரே ஒரு ஆசை தான் இருக்கிறது. மறு ஜென்மம் இருந்தால், நான் உன் இதயமாகப் பிறக்க வேண்டும். அப்போதுதான் நான் உன்னுள் துடித்துக் கொண்டே இருக்க முடியும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.