
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை ஓராண்டுக்கு முன் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறார். விக்கிரவாண்டியில் மாநில அளவிலான மாநாடு ஒன்றை நடத்தி இருந்தாலும், மற்றபடி நேரடியாக களத்திற்கு வரவில்லை என்ற விமர்சனப் பார்வையும் விஜய் மீது முன்வைக்கப்படுகிறது. எனினும் முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் விஜய், நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். கட்சி உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதேவேளையில், தேர்தல் வியூகங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தவெக பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஆயத்தமாகி வருகிறார்.
நாட்டில் முக்கிய விஐபிக்களின் பாதுகாப்புக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பாதுகாப்பு அளவுகோல்களை வைத்துள்ளது. தேவைக்கு ஏற்ப வழங்கும் வகையில் X, Y, Z, Z+ போன்ற பாதுகாப்பு பிரிவுகள் உள்ளன. அதாவது மிரட்டல் நிலை, புலனாய்வு தகவல்கள், அரசியல் முக்கியத்துவம் அடிப்படையில் இந்த பாதுகாப்பு நிலைகள் வழங்கப்படும். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரிவில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள், ஆயுதம் ஏந்திய காவலர்கள் என 8 முதல் 11 பேர் பாதுகாப்பு அளிப்பார்கள் என கூறப்படுகிறது. இதன்படி அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப் படை வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இந்த பாதுகாப்பு தமிழகத்துக்குள் மட்டும் வழங்கப்படும்.