
வங்கதேசத்தில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக அவாமி லீக் கட்சி தலைவர்களின் வீடுகளை சூறையாடுவது உட்பட பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த நிலையில், அங்கு 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம் கடந்த ஆண்டு தீவிரமடைந்தது. போலீசார் – மாணவர் இடையே மோதல் வெடித்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.நெருக்கடி முற்றியதை அடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறினார். பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி அமைந்துள்ளது.
இந்நிலையில், இணையதளம் வாயிலாக ஷேக் ஹசீனா தன் அவாமி லீக் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த 5ம் தேதி இரவு உரையாற்றினார்.அப்போது, இடைக்கால அரசுக்கு எதிராக போராட அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் காட்டுத் தீயாய் பரவியதை அடுத்து, அவாமி லீக் தலைவர்களின் வீடுகள் குறிவைத்து சூறையாடப்பட்டன.ஷேக் ஹசீனா ஆட்சியில் விடுதலைப் போர் விவகாரங்கள் துறை அமைச்சரான மொசம்மல் ஹக்கின் காசிப்பூர் வீடு, மாணவர் அமைப்பினரால் கடந்த 7ம் தேதி தாக்கப்பட்டது.
அப்போது, இச்செயலில் ஈடுபட்ட 14 பேரை, அடையாளம் தெரியாத நபர்கள் கடுமையாக தாக்கினர். படுகாயமடைந்த அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி, மாணவர் அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இதையடுத்து, மாணவர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய, அங்கு ‘ஆப்பரேஷன் டெவில் ஹன்ட்’ என்னும் கூட்டு நடவடிக்கைக்கு வங்கதேச அரசு உத்தரவிட்டது.அந்நாட்டின் முப்படைகள், எல்லை காவல் படை, கடலோர காவல் படை, போலீசார் ஆகியோர் அடங்கிய இந்த கூட்டு நடவடிக்கை குழு, நாடு முழுதும் வேட்டையில் ஈடுபட்டது. இந்தக் குழு நடத்திய சோதனையில், 1,308 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து, உள்துறை ஆலோசகரும், ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியுமான ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி கூறுகையில், “நாட்டை சீர்குலைக்க முயற்சிப்பவர்களை தடுக்கும் நோக்கில் இந்த கூட்டு நடவடிக்கை குழு துவங்கப்பட்டுள்ளது.“சட்டத்தை மீறுபவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பயங்கரவாத செயல்களில் தொடர்பு உடையவர்கள் என அனைவரையும் வேரோடு நசுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்,” என்றார்.
இதற்கிடையே, வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘நாட்டில் வன்முறை கலாசாரத்தைக் கட்டுப்படுத்தி, சட்டம்- – ஒழுங்கை மீட்டெடுக்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், பாசிச சக்திகள் மீண்டும் தலைதுாக்கும்’ என்று எச்சரித்து உள்ளது.இந்தக் கருத்தை வலியுறுத்தி, நாடு முழுதும் இன்று பிரமாண்ட பேரணி நடத்தவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.