
சிறுவனின் கழுத்து வழியாக இதய பகுதிக்குள் நுழைந்த தென்னை மட்டையை, டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பத்தினர், கூலி வேலைக்காக குடகின் மடிகேரி வந்திருந்தனர். இங்கு தங்கி இருந்தனர். இவர்களின் மகன் கமல்ஹசன்(12).கடந்த 8ம் தேதி இரவு 7:00 மணிக்கு கமல்ஹசன், வீட்டு வாசல் படியில் நின்றிருந்தார். அப்போது, தென்னை மரத்தில் இருந்து முறிந்து அவர் மீது கூரான மட்டை விழுந்தது. அதில் இருந்த ஒரு பகுதி, கழுத்து வழியாக இதய பகுதி வரை சென்றது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை உடனடியாக மடிகேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்குள்ள டாக்டர்கள், சிறுவனின் உடலில் சிக்கியிருந்த தென்னை மட்டையை இங்கே எடுக்க முடியாது. மங்களூரின் வென்லாக் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினர். அதன்படி நள்ளிரவு 12:15 மணிக்கு வென்லாக் மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச் சென்றனர்.சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, தென்னை மட்டையை வெளியே எடுத்தனர். தற்போது சிறுவன் குணமடைந்து வருகிறான்.
வென்லாக் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் சிவபிரகாஷ் கூறியதாவது:கழுத்து வழியாக, சிறுவனின் இதய பகுதிக்குள் குத்தியிருந்த தென்னை மட்டையை, எங்கள் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர், இரண்டு மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து, வெளியே எடுத்தனர்.
இதய கூட்டில், தென்னை மட்டுமல்ல சிறுவனின் கழுத்தில் இருந்த செயினும் சிக்கி இருந்தது. இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக ரத்த நாளங்களை சேதப்படுத்தவில்லை. அறுவை சிகிச்சைக்கு பின், சிறுவன் உடல் நலம் தேறி வருகிறார்.தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்திருந்தால், 8 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவாகி இருக்கும். வென்லாக் மருத்துவமனையில் இலவசமாக செய்தோம்.இவ்வாறு அவர் கூறினார்.