
பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, டெல்லி அரசின் பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்காக டெல்லி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி டெல்லியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதாக அவர் உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் ஆட்சி அமைப்பது குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் நேற்று முன்தினம் மாலை ஆலோசனை நடத்தினர். யார் முதல்வர் என்ற அறிவிப்பை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை.
புதுடெல்லி தொகுதியில், முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிட்டு 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பர்வேஸ் வர்மா முதல்வருக்கான போட்டியில் முதல் இடத்தில் உள்ளார். இவர் மேற்கு டெல்லி தொகுதியில் 2 முறை எம்.பி.யாக இருந்தவர். டெல்லி முன்னாள் முதல்வர் ஷாகிப் சிங் வர்மாவின் மகன். சிறுபான்மையினருக்கு எதிராக இவர் தெரிவித்த சர்ச்சை கருத்துக்களால், கடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட பாஜக மேலிடம் இவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஆனாலும், மனம் தளராமல் சட்டப்பேரவை தேர்தலில் உற்சாகமாக பணியாற்றி அர்விந்த் கேஜ்ரிவாலை வீழ்த்தியுள்ளார். இதனால் இவர் முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் 26 ஆண்டுக்களுக்குப்பின் பாஜக ஆட்சி அமையவுள்ளதால், பதவியேற்பு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த பாஜக விரும்புகிறது. இன்று பிரான்ஸ் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் 12-ம் தேதி அமெரிக்கா செல்கிறார். அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் டெல்லி அரசின் பதவியேற்பு விழா நடத்தப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.