
மத்தியப் பிரதேசத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சிக்கு புறப்பட்டது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் சென்றனர். நடுவானில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்படும் சூழல் உருவானதால், பைலட்டுகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து வெளியேறினர். இதையடுத்து இந்த விமானம் மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் குவாலியர் அருகேயுள்ள பரேட்டா சானி என்ற கிராமத்தில் விழுந்து தீப்பிடித்தது. பாராசூட் மூலம் குதித்த வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உள்ளூர் மக்களும், அதிகாரிகளும் உதவினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராய துறை ரீதியான விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
மிராஜ் 2000- ரக போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த விமானம் விமானப்படையில் முக்கிய அங்கமாக திகழ்கிறது. கார்கில் போர் வெற்றிக்கு மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. மலை உச்சியில் பதுங்கியிருந்து தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் முகாம்கள் மீது லேசர் குண்டுகளை வீச மிராஜ் 2000 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றின என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது குண்டுகள் வீசவும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.இந்திய விமானப்படையில் மிகவும் நம்பகமான போர் விமானமாக திகழ்ந்த மிராஜ் 2000 ரக விமானம் தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்தை சந்தித்துள்ளது.