
பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட மூன்று ஓய்வூதிய திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த மாதம் 24ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பற்றி தமிழ்நாட்டிலும் பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்திட ஒரு குழு அமைத்திட அரசு முடிவு செய்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையிலான குழுவில் சென்னை பொருளியல் கல்வி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் கே.ஆர். சண்முகம் இடம் பிடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்திக் தாயாள் உறுப்பினர் செயலராக குழுவில் இடம்பெற்றுள்ளார்.