
திருமலையில் நடைபெறவுள்ள ரதசப்தமி விழாவின் பாதுகாப்பு பணிக்கு 1250 போலீஸார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி -திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று திருமலை திருப்பதி அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தலைமையில் அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர், இதில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் குறித்து பிஆர் நாயுடு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
வரும் 4-ம் தேதி திருமலையில் மிக சிறப்பாக ரதசப்தமி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் உற்சவர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
இவ்விழாவுக்கு 2.5 முதல் 3 லட்சம் வரை பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, 4-ம் தேதி அஷ்டதள பாத பத்மாராதனை, திருக்கல்யாண சேவை, ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை போன்ற ஆர்ஜித சேவைகள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமகன்கள், கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் என இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
சர்வ தரிசன டோக்கன்களும் வரும் 3 ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வழங்கப்பட மாட்டாது. இதேபோல் விஐபி பிரேக் தரிசனத்துக்கான சிபாரிசு கடிதங்களும் பெற மாட்டாது. பாதுகாப்பு பணிக்கு 1,000 தேவஸ்தான கண்காணிப்பு படையினர், 1,250 போலீஸார் நியமனம் செய்யப்படுகின்றனர்.
மாட வீதிகளில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தொடர்ந்து மோர், குடிநீர், சிற்றுண்டி, உணவு பொட்டலங்கள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 8 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அறங்காவலர் குழு தலைவர் பிஆர் நாயுடு தெரிவித்தார். கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.
அறங்காவலர் குழு கூட்டத்தை தொடர்ந்து பிஆர் நாயுடு, நிர்வாக அதிகாரி சியாமள ராவ் உட்பட உயர் அதிகாரிகள் ரதசப்தமிக்கான ஏற்பாடுகளை மாடவீதிகளில் நேரில் பார்வையிட்டனர்.