Saturday, April 5, 2025
Homeசெய்திகள்77 நாடுகளின் தூதர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை.

77 நாடுகளின் தூதர்கள் மகா கும்பமேளாவுக்கு வருகை.

மகா கும்பமேளாவை பார்வையிட 77 நாடுகளின் தூதர்கள் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து புனித நீராடி வருகின்றனர். வரும் பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த புனித நீராடும் நிகழ்ச்சியில் சுமார் 45 கோடி பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள பல்வேறு நாடுகளின் தூதர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 77 நாடுளின் தூதர்கள், அவர்களின் மனைவி / கணவர் என 118 பேர் மகா கும்பமேளாவில் இன்று கலந்து கொண்டனர். விமானம் மூலம் பிரயாக்ராஜ் நகருக்கு வருகை தந்த அவர்கள், பின்னர் அங்கிருந்து பேருந்துகள் மூலம் மகா கும்பமேளா நடைபெறும் திரிவேணி சங்கமத்துக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கும்பமேளாவுக்கு வருகை தந்த இந்தியாவுக்கான அர்ஜென்டினா தூதர் மரியானோ கௌசினோ, “இந்த முக்கியமான விழாவில் பங்கேற்று மரபுகளைப் பின்பற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என தெரிவித்தார்.

இந்தியாவுக்கான ஸ்லோவாக் தூதர் ராபர்ட் மாக்சியன் கூறுகையில், “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்த மகத்தான ஆன்மிக நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக உங்கள் அரசாங்கத்துக்கு வாழ்த்துக்கள். அமைதி, தியாகம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் இந்நிகழ்வில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால், இந்த நாள் மிகவும் அழகான நாளாக மாறி உள்ளது. நான் இந்தியாவின் ரசிகன். இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், யோகா உள்ளிட்டவற்றை நான் நேசிக்கிறேன். இந்தியா எனது இரண்டாவது வீடு போன்றது.” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments