இன்று தை திருநாள்!! தமிழர்களின் முக்கியமான பண்டிகையான பொங்கல் திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்கழி முடிந்து தை பிறக்கும் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகின்றது. உழவர் திருநாளான பொங்கலன்று, நாம் விவசாயிகளுக்கும், விவசயத்திற்கு உதவும் இயற்கை, கால்நடைகள் என அனைவருக்கும் நன்றி செலுத்துகிறோம்.
தமிழ் பாரம்பரியத்தின் படி பார்த்தால் தமிழ் வரலாற்றில் சங்க காலம் முதல், சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் இருப்பதற்கான சான்றுகள் உள்ளன. அறுவடை காலத்தில் விவசாயிகளின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் இந்த திருநாள் குறிக்கின்றது. பண்டைய இலக்கியங்களும், நூல்களும் பொங்கல் பண்டிகையை ஒரு சமூக கொண்டாட்டமாக, இயற்கைக்கான காணிக்கை காலமாக விவரிக்கின்றன.
