குடும்பங்கள் கொண்டாடிய விசு-எஸ்.வி.சேகர் கூட்டணியின் 5 படங்கள்.. இல்லத்தரசிகளை தியேட்டருக்கு வர வைத்த ஜாம்பவான்

0
131

இவர்கள் கூட்டணியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படமாகவும் சிறந்த கதையாகவும் பல படங்கள் அமைந்தன.

Director Visu: இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் அவர்களின் உதவி இயக்குனராக இருந்தவர் விசு. தில்லுமுல்லு படத்தில் மூலம் தன் நேர்த்தியான வசனங்களை அரங்கேற்றம் செய்தவர் விசு. ஒரு வீட்டில் உள்ள அனைவரும் ஒரு சேர்ந்து அமர்ந்து படம் பார்க்க வைப்பதையே தன்னுடைய ஸ்டைலாக கொண்டு படம் இயக்கியவர் இவர். ஹீரோவுக்கு முக்கியத்துவம் தருகிற விதமாக இவர் படம் இருக்காது. இவர் படங்களில் கதையின் நாயகன் கதை தான். ஆனாலும் இவருடைய அநேகமான படங்களில் முக்கிய கேரக்டரில் நடிகர் எஸ்.வி.சேகர் நடித்திருப்பார். இவர்கள் கூட்டணியில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் படமாகவும் சிறந்த கதையாகவும் பல படங்கள் அமைந்தன. அதில் சில இதோ.

வேடிக்கை என் வாடிக்கை : ஒரு குடும்பத்தில் சின்னதாக வரும் பிரச்சனை பல வருடமாகியும் தீர்வு இல்லாமல் போய் கொண்டிருக்கும். காவி சட்டை கந்தசாமியாக விசு தன் தங்கை மனோரமாவின் மகள் மற்றும் இரு மகன்களின் திருமணத்தை மனோரமாவின் கணவரை எதிர்த்து எப்படி நடத்தி வைக்கிறார் என்பது தான் கதை. இதில் மனோரமாவின் மூத்த மகனாக வரும் எஸ்.வி. சேகர் சமூகத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையுடன் இருப்பார். எஸ்.வி. சேகருக்கு ஏற்றார் போலவும் மனோரமாவின் ஆசை படியும் தில்லாலங்கடி வேலைகள் செய்து அந்த வீட்டில் தோன்றும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார் விசு. முதலில் அப்பா தம்பியுடன் சேர்ந்து விசுவை எதிர்க்கும் எஸ்.வி. சேகர் பின்பு விசுவிடம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவர் பக்கம் சேர்ந்து அப்பா தம்பியை ஸ்தம்பிக்க வைப்பார்.

மணல் கயிறு : திருமணத்துக்கு எட்டு கண்டிஷன்கள் போடும் கிட்டு மணியை மறந்திருக்கலாம், ஆனால் அந்த எட்டு கண்டிஷன்களையும் நாரதர் நாயுடுவையும் நம்மால் மறக்க முடியாது. ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்து பெண்ணை நல்ல இளைஞனான எஸ். வி. சேகருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பல விதமான நாரதர் வேலைகளை செய்து எல்லா கண்டிஷங்களும் பெண்ணும் ஓகே என்று திருமணம் செய்து வைப்பார் விசு. திருமணம் ஆன பிறகு ஒவ்வொரு கண்டிஷனும் காற்றோடு மணலாக போக எஸ்.வி. சேகருக்கு ஏறும் பிபி இருக்கிறதே படம் பார்க்க அவ்வளவு சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். இந்த மணல் கயிறு தந்த வெற்றி தான் அடுத்தடுத்த படங்களையும் அவருக்கே ஆன ஒரு ஸ்டைலை உருவாக்கியது விசுவுக்கு.

திருமதி ஒரு வெகுமதி: அக்காவின் அரவணைப்பில் வளர்ந்த இரண்டு தம்பிகள். இதில் அக்காவாக கல்பனா ஒரு தம்பியாக எஸ்.வி. சேகர் மற்றொரு தம்பியாக பாண்டியன் நடித்திருப்பார்கள். பேராசை கொண்ட பெண்ணை தெரியாமல் கரம் பிடித்து விடும் எஸ்.வி. சேகர் மனைவியால் வேலை இழந்து போலீஸிடம் மாட்டிக் கொள்வார். நல்ல குடும்பத்தில் தன் ஈகோயிஸ்ட் பெண்ணை கொடுத்து விட்டோம், அங்கு தோன்றும் பிரச்சனைகளை அவளே சரி செய்து கொள்ள தூண்டுபவராக விசு பாண்டியனின் மாமனாராக கலக்கியிருப்பார். பொறுப்பில்லாமல் இருக்கும் தம்பி பாண்டியன் பொறுப்பாக சொந்த காலில் நின்று விரைவிலேயே கார் வாங்கும் அளவுக்கு உயர்ந்து விடுவார். ஆனால் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் எஸ்.வி. சேகர் தன் மனைவி பேச்சை கேட்டு லஞ்சம் வாங்குபவராக நடித்திருப்பார்.

குடும்பம் ஒரு கதம்பம்: எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் விசுவின் எழுத்தில் அவர் முதலில் நடிகராக தோன்றிய படம் குடும்பம் ஒரு கதம்பம். நான்கைந்து வேறுபட்ட குடும்பங்கள் ஒரே குடியிருப்பில் அமைத்த இடத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான திருக்கதையில் அமைந்திருக்கும் படம் குடும்பம் ஒரு கதம்பம். எஸ். வி. சேகர் சுஹாசினி ஒரு வீட்டில் குடியிருப்பார்கள், எஸ். வி. சேகர் பழைமை வாத எண்ணமும் ஆணாதிக்க மனோபாவம் உடையவராக நடித்திருப்பார். அடுத்த வேலை சோற்றுக்கு அல்லாடினாலும் மனைவியை வேலைக்கு அனுப்புவதை தன்மானத்திற்கு சவாலான விஷயமாக பார்க்கும் ஆளாக நடித்திருப்பார். சில சுவாரசியமான தனித்தன்மை உடைய பாத்திரங்களை உருவாக்கி இவர்களின் வாழ்க்கையில் நடக்கும் இன்ப துன்பங்களும் பெண்கள் வேலைக்கு செல்லும் பிரச்சனைகளை 80 களிலேயே அலசி இருப்பார் விசு.

டௌரி கல்யாணம்: 1983 ஆம் ஆண்டு விசு எஸ்.வி. சேகர், ஸ்ரீ வித்யா, விஜி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் டெளரி கல்யாணம். இப்படத்தில் முக்கிய வேடத்தில் விஜயகாந்த் நடித்திருப்பார். பணக்கார குடும்பத்தில் அம்மா பேச்சைக் கேட்கும் அமைதியான பையனாக எஸ். வி. சேகர் நடித்திருப்பார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த விசு தங்கை விஜியின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்தி வைக்க சபதம் எடுத்திருப்பார். கடன்பட்டாவது தங்கையின் திருமணத்தை அமோகமாக நடத்த நினைக்கும் விசு பல சோதனைகளையும்,
வேதனைகளையும் தாண்டி சிறப்பாக நடித்திருப்பார். அவருக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். எஸ்.வி. சேகர் தன் மனைவியாக போகும் விஜியை பார்த்து வழிவதும் ஆகிய காட்சிகளும் அவரை திரும்பத் திரும்ப பார்க்க அவர் எடுக்கும் முயற்சிகளும் நகைச்சுவையாக இருப்பதோடு ரசிக்கவும் வைக்கும்.