தமிழ் சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தான். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. தளபதி திரைப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்த பிறகு ரஜினிகாந்த் இந்த படத்தில் தான் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு இதுவும் ஒரு மிக முக்கிய காரணம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா திரைப்படத்திற்கு பிறகு, தன்னுடைய படங்களை யார் இயக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தி வருகிறார். சில நேரங்களில் கதைகளில் கூட அவ்வளவு மெனக்கெடல் எடுக்காமல் தான் தேர்வு செய்த இயக்குனர் மட்டும் இருந்தால் போதும் என்று கூட ஒரு சில படங்களில் நடித்தார். அண்ணாத்தே திரைப்படத்திற்கு பிறகு தான் ரஜினி இப்போது கதைகளிலும் கவனம் செலுத்துகிறார்.
சமீபத்தில் ரஜினி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வம் காட்டினார். அவருடைய ஆசையை புரிந்து கொண்டு பல திரை பிரபலங்களின் ஒத்துழைப்பில் தற்போது தலைவர் 171 லோகேஷ் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. லியோ ரிலீசுக்கு பிறகு லோகேஷ் இந்த படத்திற்கான வேலைகளை ஆரம்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் 2 திரைப்படத்திற்கு பிறகே லோகேஷ், கைதி இரண்டாம் பாகம் தான் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. லோகேஷும் அப்படி ஒரு பிளானில் தான் இருந்தார். மேலும் கைதி படத்தின் ஹீரோ கார்த்தியும் ரொம்ப நம்பிக்கையாக ரசிகர்களிடம் விரைவில் கைதி 2 வரும் என சொல்லிக் கொண்டிருந்தார். திட்டமிட்டபடி பொன்னியின் செல்வன் மற்றும் லியோ முடிந்த கையோடு இவர்கள் இருவரும் இணைய வேண்டியது.
ஆனால் ரஜினிக்காக எல்லாமே தலை கீழாக மாற்றப்பட்டது. கைதி, நடிகர் கார்த்தியின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்த கார்த்திக்கும் இது மிகப்பெரிய ஏமாற்றம் தான். ஆனால் கார்த்திக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே ரஜினியால் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படம் ஒன்று கை நழுவி போய் இருக்கிறது.
நடிகர் ஆர்யாவுக்கு பல வருடங்களுக்கு பின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் சர்பட்டா பரம்பரை. உண்மையில் இந்த கதையை பா. ரஞ்சித் முதலில் கார்த்தியிடம் தான் சொல்லி எல்லாம் ஓகே ஆகியிருக்கிறது. அந்த நேரத்தில் தான் ரஜினி ரஞ்சித்தை கூப்பிட்டு கபாலி பண்ண சொல்லியிருக்கிறார். அதோடு சர்பட்டா பரம்பரை பட கதை எடுக்கும் போது கார்த்தியின் கால்ஷீட் இல்லாமல் ஆர்யா நடிக்க வேண்டியதாயிற்று. இப்படி கைதி 2 மற்றும் சர்பட்டா பரம்பரை என இரண்டு படங்கள் சூப்பர் ஸ்டரால் கார்த்தியின் கை நழுவி போயிருக்கிறது,