அதல பாதாளத்திற்கு சென்ற பிரபல தயாரிப்பு நிறுவனம்.. 13 நாள் கால் சீட்டில் ரஜினி செய்த மேஜிக் ஹிட் படம்

0
287

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ரஜினியை பொறுத்த வரையிலும் அவருடைய இத்தனை வருட சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் பெரும்பாலும் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனத்திடமோ அல்லது இயக்குனர்களிடமோ படம் அல்லது பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பது அவருக்கு கிடையாது.

மேலும் தான் வளர்ந்து வந்த காலத்தில் தனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுப்பதற்கு ரஜினிகாந்த் என்றுமே தயங்கியதே இல்லை. அப்படி ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் மொத்தமாக சோலி முடியும் நேரத்தில் இருக்கும்பொழுது ஒரே படம் நடித்துக் கொடுத்து அந்த நிறுவனத்தையே தூக்கி நிறுத்தி இருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

60களின் காலகட்டத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் என்றால் அது ஏவிஎம் நிறுவனம் தான். ஏவி மெய்யப்ப செட்டியார் என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இருந்து பல முன்னணி நடிகர்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவின் முக்கியமான நிறைய படங்கள் இந்த நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்கப்பட்டது. ஒரு காலகட்டத்தில் வியாபாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பொழுது இந்த நிறுவனம் முதலில் நாடியது ரஜினியை தான்.

ஏவிஎம் நிறுவனம் முதன் முதலில் ரஜினிகாந்துடன் இணைந்த திரைப்படம் முரட்டுக்காளை. இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் மொத்தமாக திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் இது. இந்த நிறுவனம் ஏதாவது ஒரு படத்தின் மூலம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலைமையில் இருந்த பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படு பிஸியாக நடித்துக் கொண்டு இருந்தார். ஒரு நாளைக்கு ஐந்து படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தார்.

இருந்த போதும் தனக்கு வெற்றி படங்களை கொடுத்த ஏவிஎம் நிறுவனத்திற்கு உதவ வேண்டும் என்று எண்ணிய ரஜினி, மொத்தமாக 13 நாட்கள் கால் சீட் கொடுத்திருக்கிறார். உடனே அந்த நிறுவனம் இயக்குனர் முத்துராமனை அணுகி படம் முழுக்க ரஜினி வருவது போல் ஒரு கதை எழுதி உடனே படத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. முத்துராமனும் படம் முழுக்க அவர் இருப்பது போல் எழுதிய கதை தான் ராஜா சின்ன ரோஜா.

1989 ஆம் ஆண்டு இந்த படம் ரிலீஸ் ஆனது. படம் முழுக்க நான்கு குழந்தைகளுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வருவது போல் எடுக்கப்பட்ட இந்த கதை ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. மேலும் இந்த படத்தில் தான் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டால் என்ற பாடலும் இடம்பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ஏவிஎம் நிறுவனத்தின் வியாபாரமும் நல்ல நிலைக்கு வந்து அதன் பிறகு நிறைய வெற்றி படங்களையும் கொடுத்தது.