Saturday, April 19, 2025
Homeசெய்திகள்முதன்முறையாக தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்த பாவனா.

முதன்முறையாக தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்த பாவனா.

தமிழில் முன்னணி நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பாவனா. அஜித்துக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்த அவர் அதற்கு பிறகு பெரிதாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. அவ்வப்போது மலையாள திரையுலகில் தலைகாட்டி வந்த அவருக்கு சில வருடங்களுக்கு முன்பு விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடிகர் திலீப்குமார் மூலம் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் திலீப் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில் அந்த விஷயம் குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் பாவனா.

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் பாவனா. அவரது இயற்பெயர் கார்த்திகா என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நம்மல் என்கிற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்துக்கு பிறகு அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி க்ரோனிக் பேச்சிலர், சிஐடி மூசா, ஸ்வப்னகூடு, இவர், யூத் ஃபெஸ்டிவல், அம்ருதம் என ஏராளமான மலையாள படங்களில் நடித்து அங்கு குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக வலம் வர ஆரம்பித்தார்.

மலையாள திரையுலகில் ஃபேமஸ் ஆனால் தமிழ் திரையுலகு கதவும் திறக்கும் என்கிற வழக்கப்படி மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். அந்தப் படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்று பாவனாவுக்கு வெளிச்சத்தை பாய்ச்சியது. அந்தப் படத்துக்கு பிறகு வெயில், கூடல் நகர், தீபாவளி, ராமேஸ்வரம், ஆர்யா,கிழக்கு கடற்கரை சாலை என வரிசையாக தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கொட்ட ஆரம்பித்தான். இப்படிப்பட்ட சூழலில்தான் டாப் ஹீரோவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

சரண் இயக்கத்தில் அஜித் நடித்த அசல் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார் பாவனா. பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படம் வெளியானாலும் படுதோல்வியை சந்தித்தது. மேலும் இந்தப் படத்தின் மூலம் தனக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்த பாவனாவுக்கும் வாய்ப்புகள் எதுவும் தமிழில் கிடைக்கவில்லை. அதனைத் தொடர்ந்து மீண்டும் மலையாளத்துக்கு சென்று அங்கு வரிசையாக படங்களில் நடித்தார். அங்கு டாப் ஹீரோயினாகவும் வலம் வர ஆரம்பித்தார்.

இப்படிப்பட்ட சூழலில்தான் பாவனாவுக்கு அந்த விரும்பத்தகாத நிகழ்வு நடந்தது. அதாவது கடந்த 2017ஆம் ஆண்டு ஷூட்டிங்கை முடித்துவிட்டு காரில் சென்றுகொண்டிருந்த அவரை சிலர் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தினர். இந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மலையாள நடிகர் திலீப்குமாருக்கு பங்கு இருப்பது தெரியவந்தது. அதன் பிறகு பாவனா கொடுத்த புகாரின் அடிப்படையில் திலீப் கைது செய்யப்பட்டு பிறகு பிணையில் வந்தார். இந்த விஷயம் இன்றுவரை மலையாள திரையுலகத்துக்கு பெரும் கரும்புள்ளியாகத்தான் இருக்கிறது.

இந்நிலையில் பாவனா மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் சூழலில் பிஹைண்ட்வுட்ஸ் எனும் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “அசல் படத்துக்கு பிறகு எதற்காக எனக்கு தமிழில் வாய்ப்புகள் வரவில்லை என்று தெரியவில்லை. எனக்கு சரியான வழிகாட்டிகள் சினிமாவில் இல்லை. என்னை எளிதில் தொடர்புகொள்ள முடியாத நிலையும் இருந்தது. அதுதான் பாதி காரணம். பலர் என்னை பார்க்கும்போது இந்தக் கதைக்கு நான் உங்களைத்தான் யோசித்திருந்தேன் என்று சொல்வார்கள்.

எனக்கு அந்த சம்பவம் நடந்தபோது (பாலியல் தொல்லை சம்பவம்) நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அதனால்தான் உடனடியாக நான் காவல் துறையில் புகார் கொடுத்தேன். நான் எந்தத் தப்பும் செய்யாதபோது ஏன் பயப்பட வேண்டும். இதை செய்தால் இது நடக்கும்; அதை செய்தால் அது நடக்கும் என்றெல்லாம் நான் யோசித்ததே இல்லை. அப்போதைக்கு எது சரி என்று பட்டதோ அதனைத்தான் நான் செய்தேன். நான் புகார் அளித்தது பெரிய விஷயம் என்றெல்லாம் எனக்கு தோன்றவே இல்லை. நமக்கு சரி என்று படும் விஷயத்தை செய்வதற்கு எதற்காக பயப்பட வேண்டும்.

இந்த விஷயங்களை பற்றி வெளியே சொல்லாமல் இருந்தால்தான் பிரச்னை வரும். சொன்னால் பிரச்னை வராது. ஒருவேளை நான் இதனை சொல்லாமல் இருந்திருந்தால் நீங்கள் ஏன் இதை முன்கூட்டியே சொல்லவில்லை என்று கேட்பார்கள். அதனால் எனக்கு தோன்றியதை அப்போதே நான் செய்துவிட்டேன். நான் கீழே விழுந்தவுடன் மருத்துவமனைக்கு சென்றால்தான் பயன் கிடைக்கும். ஒரு மாதம் கழித்து அங்கு சென்றால் அதனால் எனக்கு என்ன பயன் கிடைத்துவிட போகிறது. எல்லாமே வேஸ்ட்தான். அந்த நோக்கத்தில்தான் அவ்விஷயத்தில் நான் அப்படி செய்தேன்.

அந்த சம்பவம் நடப்பதற்கு முன்னர் நான் சில படங்களில் கமிட்டாகியிருந்தேன். ஆனால் அந்த சம்பவத்துக்கு பிறகு மனரீதியாக நான் நார்மலாக இல்லை. என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை. அதனால் நான் ஷூட்டிங் செல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் நான் பிருத்விராஜுடன் ஒரு படத்தில் கமிட்டாகியிருந்தேன். அவரிடமும், இயக்குநரிடமும் வேறு யாரையாவது வைத்து இந்தப் படத்தை உருவாக்குங்கள் என்று சொன்னேன். ஆனால் அவர்களோ அதெல்லாம் இல்லை நீங்கள் எப்போ நார்மலாகி ஓகே சொல்கிறீர்களோ அப்போது ஷூட்டிங்கை வைத்துக்கொள்வோம் என்று சொனனர்கள். அவர்களால்தான் நான் மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்தேன்.

உதாரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தால் பயமாக இருக்கும். புதுப்படங்கள் கமிட் செய்வதற்கு பயமாக இருக்கும். இப்படி பல விஷயங்களுக்கு நான் பயந்தாலும் அதனை வெளியில் காட்டிக்கொள்ளமாட்டேன். இப்போதைக்கு சமூகத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதுகூட எனக்கு தெரியாது. சில வாரங்கள் கழித்துதான் எனக்கு அது தெரியவரும். அதையெல்லாம் தெரிந்துகொண்டு நான் என்ன செய்யப்போகிறேன். அப்படி தெரிந்துகொண்டால் சில விஷயங்களை நம்மை ரொம்பவே ஸ்ட்ரெஸ் ஆக்கும். அதெல்லாம் எனக்கு பிடிக்காது. அதேபோல் எனக்கு ஏதாவது நடந்தால் வெளியில் யாரிடமும் சொல்லிக்கொள்ளமாட்டேன்” என்றார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

முன்னதாக அந்த சம்பவம் நடந்த பிறகு பாவனா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தார். அப்படிப்பட்ட சூழலில் கடந்த 2018ஆம் ஆண்டு நவீன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களது திருமண வாழ்க்கை சுமூகமாகவும், காதலோடும் நகர்ந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கும் பாவனா தமிழில் The Door என்ற படத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments