
தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டுக்கு குறைந்த பட்சம் 100 படங்களில் இருந்து அதிகபட்சம் 200 படங்கள் வரை ரிலீஸ் ஆகிறது. இதில் சில வாரங்கள் படங்கள் ரிலீஸ் ஆகாமல் கூட போகிறது. சினிமா உலகம் மிகவும் போட்டிகள் நிறைந்த உலகமாக மாறிவிட்டது. ரசிகர்களின் ரசனை நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. இப்படி இருக்கும்போது, ரசிகர்கள் ஒரு படத்தை தியேட்டருக்கு சென்று பார்க்கலாமா வேண்டாமா என்ற எண்ணம் பலருக்கு உள்ளது. பலர் விமர்சனங்களைப் பார்த்துவிட்டு படம் பார்க்கச் செல்கிறார்கள்.
அந்த வகையில் பலரது கவனத்தை ஈர்த்தவர் ஏன்றால் அது, தமிழ் டாக்கீஸ் யூடியூப் சேனல் ப்ளூ சட்டை மாறன் தான். இவரது விமர்சனத்திற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும் அவரது விமர்சனம் சரியானது என கூறும் ரசிகர்களும் உள்ளார்கள். அவரது விமர்சனம் எப்போது வரும் என பல திரைத்துறையினர் காத்துக் கொண்டு உள்ளார்கள் எனலாம்.
அதே நேரத்தில் அவரது விமர்சனத்தை அவர் படத்தை விமர்சனம் செய்யும் முறைக்காகவே பலர் பார்க்கின்றார்கள். குறிப்பாக ஒரு படத்தை அதன் திரைக்கதை, கதை நகர்வு, கதாபாத்திர வடிவமைப்பு, பின்னணி இசை, நடிப்பு என பலவற்றை ட்ரோல் செய்து விமர்சிக்கும் அவரது விமர்சனத்திற்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல் இவர் ஒரு படத்தை பாராட்டும் போது பயன்படுத்தும் வார்த்தைகள், மேற்கோள் காட்டும் விஷயங்கள் என பல ரசிகர்கர்களால் கவனிக்கப்படுகிறது.
படக்குழு தரப்பில் மிகவும் பில்டப் கொடுக்கப்பட்ட படம் மிகவும் சுமாராக இருந்தாலோ அல்லது படம் மொத்தமாகவோ சரியில்லை என்றால் படக்குழுவினரை கலாய்த்து தள்ளிவிடுவது அவரது ஸ்டைலாக உள்ளது. இதனால் பல படக்குழுவினர் இவர்மீது நடவடிக்கை தேவை என கோரிக்கை எல்லாம் வைத்துள்ளார்கள். இப்படியான நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான விக்ரமன், ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் தனக்கு பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, ” நான் சினிமா விமர்சனம் எல்லாமே பார்ப்பேன். அதில் 10 பேர் உண்மையாக விமர்சனம் செய்கிறார்கள். ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் மிகவும் பிடிக்கும். அவர் இயக்குநர்கள் சங்கத்தில் உறுப்பினர். நான் இயக்குநர் சங்கத் தலைவராக இருந்த போது பலரும் அவர் மீது நடவடிக்கை தேவை, அவரை தடை செய்ய வேண்டும் எனக் கூறினார்கள். விமர்சிப்பது அவரது உரிமை. அதைச் செய்யக்கூடாது என நாம் கூறமுடியாது. ப்ளூ சட்டை மாறன் ரொம்பவும் நேர்மையாக விமர்சனம் செய்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இயக்குநர் விக்ரமனின் இந்த பேச்சு தொடர்பான செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன் விக்ரமனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவுக்கு இணைய வாசி ஒருவர், ” படத்துக்கும்,பணம் கொடுத்து படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கும் மட்டுமே உண்மையாக இருக்கனும்.. மாறாக படம் தயாரிப்பவன்,நடிச்சவன், எடுத்தவனுக்கு ஒரு காலமும் சாய்ந்து விடக்கூடாது. அந்த வகையில் 100% ப்ளூ சட்டை மாறன் நீங்கள் சரியானவர்” என ப்ளூ சட்டை மாறனை பாராட்டி பதிவிட்டுள்ளார். மற்றொருவர் நேர்மைக்கு கிடைத்த பரிசு என பதிவிட்டுள்ளார். ப்ளு சட்டை மாறனின் இந்த பதிவுக்கு கமெண்ட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.