
தூத்துக்குடி மாவட்டம் தூவத்தூர் மீனவ கிராம மக்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதில்லை. அதைச் சபிக்கப்பட்ட கடல் பகுதி என்று நம்பும் அவர்கள், மீறிச் சென்றால் சடலமாகக் கரை ஒதுங்குகிறார்கள். இதனால் அங்கு மீன் பிடிக்க அரசு தடை விதிக்கிறது. 1982-ல் இறந்து போன போஸ் (அழகம் பெருமாள்) என்பவரின் ஆத்மாதான் இதைச் செய்கிறது என மக்கள் நம்புகின்றனர்.
அதே நேரத்தில் அந்தக் கிராமத்துக் கன்னிப் பெண்களும் அவ்வப்போது மாயமாகி பிணமாகின்றனர். அதற்கு என்ன காரணம்? உள்ளூர் தாதா தாமஸிடம் (ஷிபுமோன்) மீனவராக பணியாற்றும் நாயகன் கிங் (ஜி.வி.பிரகாஷ்குமார்) அதைக் கண்டுபிடித்து, என்ன செய்கிறார் என்பது கதை.
ஒரே கதைக்குள், ஹாரர், த்ரில்லர், அமானுஷ்யம் என பல ஜானர்களை மிக்ஸ் செய்து வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார், அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ். படத்தின் தொடக்கக் காட்சிகள் வழக்கமான படமாகச் சென்றாலும் தடையை மீறி கடலுக்கு நாயகன் செல்லும்போது நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
கடலுக்குள் நடக்கும் அமானுஷ்யங்கள், சாகசங்கள் அழகாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன. பார்வையாளர்களுக்குப் படபடப்பையும் பயத்தையும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பையும் அக்காட்சிகள் இயல்பாகத் தருகின்றன. அந்த இடத்தில் வரும், அட்டகாசமான விஷூவலும் கிராபிக்ஸ் காட்சிகளும் பின்னணி இசையும் இணைந்து பிரமிக்க வைக்கின்றன. ஆனால், குழப்பமானத் திரைக்கதை, கதையைப் புரிந்து கொள்வதில் சிக்கலைத் தருவதால் அந்த பிரமிப்பைக் கடைசிவரை கொண்டு செல்ல தவறியிருக்கிறது, படம்.
ஊரில் யாருக்கு என்ன என்றாலும் பணத்தை அள்ளிக் கொடுக்கும் தாமஸ் கதாபாத்திரத்தின் தன்மை, கடல் அட்டை என்ற பெயரில் அவர் நடத்தும் கடத்தல் நாடகம், சர்வ வல்லமை பொருந்திய தாதாவை, ஹீரோவும் அவர் நண்பர்களும் என்ன செய்வார்கள் என்பது உள்ளிட்ட எளிதாக யூகிக்கக் கூடிய பல காட்சிகள் கதைக்குள் இழுக்க மறுக்கின்றன. பிளாஷ்பேக்கில் வரும் கிங்ஸ்டனின் தாத்தா சாலமன் (சேத்தன்) – போஸ் இடையேயான தங்கக் கடத்தல் எபிசோடும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
கிங்ஸ்டன் கதாபாத்திரம் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றாலும் நல்ல நடிப்பை வழங்கி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் காதலியாக வரும் திவ்யபாரதி, வழக்கமாக நாயகிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலையை செய்திருக்கிறார். சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் வில்லத்தன நடிப்பில் கவர்கிறார் சேத்தன். அழகம்பெருமாள், ஷபு மோன், குமரவேல், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கிறார்கள்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவில் ஆழ்கடல் நீலம் பளிச்சென தெரிகிறது. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை இரண்டாம் பாதியில் கவனம் ஈர்க்கிறது. முதல் பாதியின் நீளத்தைப் படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷ் கவனித்திருக்கலாம். மிரட்டலான கடல் சாகச த்ரில்லராக வந்திருக்க வேண்டிய கிங்ஸ்டன், திரைக்கதை கோளாறால் தடுமாறுகிறது.