Tuesday, April 22, 2025
Homeசெய்திகள்சிவாஜி வீடு ஜப்தி வழக்கில் ஏற்பட்ட திருப்பம்.

சிவாஜி வீடு ஜப்தி வழக்கில் ஏற்பட்ட திருப்பம்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்யுமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அவரது மூத்த மகன் ராம்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் ஈசன் புரொடக்சன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனம் விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் நடித்த ‘ஜகஜால கில்லாடி’ திரைப்படத்தை தயாரிக்க தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளனர்.

கடனை 30 சதவீத வட்டியுடன் திருப்பி தருவதாக உறுதியளித்தும் கடன் தொகை திருப்பி செலுத்தப்படவில்லை. இந்த கடன் பிரச்சனையை தீர்க்க சென்னை உயர்நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி டி.ரவீந்திரனை மத்தியஸ்தராக நியமித்தது.

மத்தியஸ்தர் விசாரணைக்கு பின்னர், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை கடனாக வசூலிக்கவும், ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், உரிமைகளை விற்று கடனை ஈடு செய்து மீதமுள்ள தொகையை ஈசன் புரொடக்சன்ஸிடம் வழங்கவும் உத்தரவிட்டார். ஆனால், பட தயாரிப்பு நிறுவனம் பட உரிமைகளை வழங்க மறுத்ததால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்த மனு தாக்கல் செய்தது.

அதில், தற்போது வரை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 543 ரூபாய் நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாததால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட சார் பதிவாளருக்கு தகவல் தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார். இந்நிலையில், சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், ஜப்தி உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்ட அன்னை இல்லம் நடிகர் பிரபுவுக்கு சொந்தமானது என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, கடன் பிரச்சனைக்கு தீர்வு காணவும், ஜப்தி உத்தரவை ரத்து செய்யக்கோரியும் ராம்குமார் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

மேலும், இது தொடர்பாக ராம்குமார் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் நடைபெற உள்ளது. சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனை ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments