
சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் அமெரிக்காவின் திட்டத்தின்படி, நான்காம் கட்டமாக, 12 இந்தியர்கள் நேற்று திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள், புதுடில்லி விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தனர்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றார். அதைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசு துவக்கியது.இதன்படி இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த, சட்டவிரோதமாக தங்கியுள்ளோரை சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வருகிறது. இந்த திட்டத்தின்படி, முதல் கட்டமாக, 104 பேர், இரண்டாம் கட்டமாக 116 பேர், மூன்றாம் கட்டமாக, 112 பேர் ஏற்கனவே நம் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விமானங்கள் அனைத்தும் பஞ்சாபின் அமிர்தசரசுக்கு வந்தன. இதில், பெரும்பாலானோர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். அதற்கடுத்து ஹரியானா, குஜராத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருந்தனர்.இந்நிலையில், சட்டவிரோதமாக தங்கிஉள்ளவர்களை, மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்தது.
அங்கு விசாரணைக்குப் பின், அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி, சமீபத்தில், 300 பேர் பனாமாவில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர்.கட்டாயப்படுத்தி, ஹோட்டலுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தோர் புகார் கூறியிருந்தனர். இதில், பெரும்பாலானோர் சொந்த நாட்டுக்கு திரும்ப மறுத்தனர். இந்நிலையில், பனாமாவில் இருந்து, 12 இந்தியர்கள் டில்லி விமான நிலையத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். இவர்களில், நான்கு பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். இதுவரை நான்கு கட்டங்களாக, இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.