
சென்னை அயனாவரத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(60) வயதான இவர், சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தாம்பரம் பேருந்து நிலையம் பகுதிகளில் சுற்றித் திரிந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலையில் நின்று ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை செய்து கொண்டிருந்த ரங்கநாதனை பிடித்து விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். ரங்கநாதன் தனது மகன்களின் விவரங்களை தெரிவிக்க, போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவித்து, மகன்களின் வருகைக்காக காத்திருந்தனர். ரங்கநாதனை ஒரு இடத்தில் அமர வைத்து போலீசார் மற்ற பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது திண்டிவனம் நோக்கி சென்ற காரில் சென்ற நபர்கள் காரை நிறுத்தி தண்ணீர் பாட்டில் வாங்க சென்றபோது, அவர்களை ரங்கநாதன் தாக்கியுள்ளார். காரில் வந்தவர்கள் ஆத்திரம் அடைந்து ரங்கநாதனை அடித்து தாக்கியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். போலீசார் ரங்கநாதனை மீட்டு குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்து விட்டார்.
அதைத் தொடர்ந்து காரில் வந்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிகண்டன், ஆந்திராவில் எல்.எல்.பி இறுதி ஆண்டு படிக்கும் வினோத் ஆகிய இருவரை தாம்பரம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்டவரை போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட மோதலில் அவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தாம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.