
மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் மின் வாரியத்துக்கு எவ்வித வருவாயும் கிடைக்கப்போவதில்லை. எனவே, ரூ.30,000 கோடி செலவாகும் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்று மின் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, தமிழக மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மின்வாரியத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்காக ரூ.30 ஆயிரம் கோடியை செலவு செய்யப் போவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒரு மீட்டரின் விலை கிட்டத்தட்ட ரூ.10 ஆயிரம் ஆகும். ஸ்மார்ட் மீட்டரின் விலையை மாதத் தவணையில் ஒரு மீட்டருக்கு, ஒரு மாதத்துக்கு ரூ.120 வரை என 10 ஆண்டுகளுக்கு தவணை செலுத்துவது என்பதுதான் மத்திய அரசு அறிவித்திருக்கும் திட்டம். தமிழகத்தில் கடந்த 2022-23-ம் ஆண்டு கணக்குப்படி, மின்வாரியத்துக்கு 2.32 கோடி வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. இதில், 2 மாதங்களுக்கு 100 யூனிட்டுக்குள் இலவச மின்சார இணைப்பை பயன்படுத்தும் மின் இணைப்புகளின் எண்ணிக்கை 91.7 லட்சம். இதற்கு அடுத்து 200 யூனிட்டுக்குள் மின் இணைப்பை பயன்படுத்தும் மின்இணைப்புகளின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சம் ஆகும்.
ஸ்மார்ட் மீட்டருக்காக மின்வாரியம் செலுத்தக் கூடிய 2 மாதத் தவணை என்பது ரூ.240 ஆகும். ஒரு மின் மீட்டரின் ஆயுட்கால பயன்பாடு 25 ஆண்டு காலம். ஆனால், 1999-ம் ஆண்டில் இருந்து இதுவரை 3 முறை மின்சார மீட்டர்கள் மாற்றப்பட்டு விட்டன. இதன் மூலம், ஒவ்வொரு முறையும் நல்ல நிலையில் இருந்த மீட்டர்கள் குப்பைக்கு கொண்டு செல்லப்பட்டன.
தற்போது, வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்டாடிக் மீட்டருக்கும், ஸ்மார்ட் மீட்டருக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை. மின்கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின்வாரிய அலுவலகத்தில் இருந்தே மின் இணைப்பைத் துண்டிக்க முடியும். ஆனால், ஸ்டாடிக் மீட்டரில் இது சாத்தியமில்லை. இது ஒன்றை தவிர ஸ்மார்ட் மீட்டரால் எவ்வித பயனும் கிடையாது.
மின் வாரியத்தின் தற்போது மொத்தக் கடன் ரூ.3.2 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில், ஸ்மார்ட் மீட்டர் வாங்க ரூ.30 ஆயிரம் கோடி செலவிடுவது தேவையற்ற செலவாகும். அதானி போன்ற நிறுவனங்களுக்குத்தான் இந்த ஸ்மார்ட் மீட்டரால் பயன் ஏற்படுமே தவிர, இந்த மீட்டரால் மின்வாரியத்துக்கு கூடுதல் கடன் என்பதைத் தவிர எந்தப் பயனும் இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை கைவிட தமிழக அரசை வலியுறுத்துகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.