
2013-ல் மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய த்ரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ் கமலை வைத்து ஜீத்து ஜோசப்பே அதனை இயக்கினார். தெலுங்கில் ஸ்ரீப்ரியா, கன்னடத்தில் பி.வாசு, ஹிந்தியில் நிஷிகாந்த் காமத் இயக்கினார்கள். முதல் பாகம் வசூல் வேட்டை நடத்தியதைத் தொடர்ந்து,
2021ம் ஆண்டு பிப்ரவரியில், த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைமில் வெளியானது. படம் சூப்பர் ஹிட். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஜீத்து ஜோசப் த்ரிஷ்யம் 2-வை இயக்கினார். அதில் வெங்கடேஷ், மீனா நடித்தனர். கன்னடத்தில் நவ்யா நாயர், ரவிச்சந்திரன் நடிப்பில் பி.வாசு இயக்கினார். ஹிந்தி த்ரிஷ்யத்தில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா நடித்திருந்த நிலையில், த்ரிஷ்யம் 2 படத்தின் உரிமையை தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் வாங்கியுள்ளனர். இவர்களின் பனோரமா ஸ்டுடியோ இன்டர்நேஷனல்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது.
த்ரிஷ்யம் முதல் மற்றும் 2ம் பாகம் வெளியாகி இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் ரசிகர்கள் 3ம் பாகத்திற்காக காத்திருந்தனர். தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நனவாகவுள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில் த்ரிஷ்யம் 3 உருவாகவுள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை தனது X பக்கத்தில் மோகன் லால் பகிர்ந்துள்ளார். ‘The Past Never Stays Silent Drishyam 3 Confirmed’ என்ற அவரின் பதிவு தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 3ம் பாகம் உருவாவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.