
அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதல்வரும், தமிழக நலனுக்காக தன்னையே அர்ப்பணித்தவருமான ஜெயலிதாவின் 77-வது பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து கட்சிக் கொடியேற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ஆடம்பர விழாக்களைத் தவிர்த்து, ஏழை மக்களுக்கு அவரவர் சக்திக்கேற்ப உதவிகளைச் செய்ய வேண்டும். அன்று கட்சிக் கொடிக் கம்பங்களுக்கு வர்ணம் பூசி, கொடிக் கம்பங்கள் இல்லாத இடங்களில் புதிய கொடிக் கம்பங்களை அமைத்தும், கட்சிக் கொடியை ஏற்றிவைத்தும் கொண்டாட வேண்டும். அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை கட்சியினர் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.