
மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்டவற்றை செலுத்தும் போது, குறிப்பட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கப்போவதாக கூகுள் பே நிறுவனம் அறிவித்துள்ளது.
டிஜிட்டல் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்வதில் கூகுள் பே, போன் பே, பே டி.எம்., ஆகிய செயலிகள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இதுபோன்ற ஆன்லைன் பணப்பரிமாற்ற செயலி நிறுவனங்கள், யு.பி.ஐ., (UPI) பணப்பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்ட தொகையை சேவை கட்டணமாக வசூலித்து, தங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில், போன் பே, பே டி.எம்., நிறுவனங்களைப் போன்று, சில சேவைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படும் கூகுள் பே நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே ரீசார்ஜூக்கு ரூ.3 சேவை கட்டணமாக கூகுள் பே வசூலித்து வரும் நிலையில், மின்கட்டணம், கேஸ் கட்டணம் உள்ளிட்ட சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, பில் தொகையில் இருந்து 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரையில் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மட்டும் நாட்டில் ஒட்டுமொத்தமாக ரூ.23.48 லட்சம் கோடி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், கூகுள் பே-வில் மட்டும் ரூ.8.26 லட்சம் கோடி யு.பி.ஐ., பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.