
சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து சாம்சங் ஷோரூம்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சாம்சங் தொழிலாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை திரும்பப் பெறக் கோரி சிஐடியு தொழிற்சங்கம் வலியுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் சவுந்தரராஜன், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை வரும் 24ஆம் தேதி நடைபெறும் என்றார். மேலும், சாம்சங் நிறுவனத்தின் சட்டவிரோத போக்கைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி காஞ்சிபுரம் சிப்காட் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் கூறினார். இந்தப் போராட்டமானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஷோரூம்கள் முன்னிலையில் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் நிலையான பணியிடத்தை பராமரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டுள்ள சாம்சங் நிறுவனம், சில தொழிலாளர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை அங்கீகரிக்க மாட்டோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது