
புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 18 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, ரயில் நிலையங்களில் நிரந்தரமாக காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்க செல்வதற்காக, புதுடில்லி ரயில் நிலையத்தில், கடந்த 15ம் தேதி இரவு ஆயிரக்கணக்கான பயணியர் காத்திருந்தனர்.அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, ஐந்து குழந்தைகள், ஒன்பது பெண்கள் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகளை உருவாக்கவும், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும், ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகளின் போது, மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும், 60 ரயில் நிலையங்கள் முதற்கட்டமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டத்தை நிர்வகிக்க, நிரந்தர காத்திருப்பு பகுதிகள் உருவாக்கப்படவுள்ளன.
தற்போது பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளா காரணமாக, நாட்டின் பல்வேறு ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதை சமாளிக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.இதன்படி, முதற்கட்டமாக 60 ரயில் நிலையங்களில், ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதிகளவில் கூட்டம் இருந்தால், இந்த கேமராக்கள் எச்சரிக்கை செய்யும். அதன்படி நாம் திட்டங்களை வகுத்துக் கொள்ளலாம்.
பிரயாக்ராஜுக்கு செல்ல ரயில் நிலையங்களில் மக்கள் அலைமோதுவதால், அடுத்த ஒரு வாரத்துக்கு, மாலை 4:00 – இரவு 11:00 மணி வரை டிக்கெட் விற்பனை செய்யப்படாது. அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதும், புதுடில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கு காரணம் என்றும் தெரிய வந்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, டில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பயணியர் ஒரே நேரத்தில் நடைமேடைகளில் குவியாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், டில்லி ரயில் நிலையத்தில் 18 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.