
‘அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் அமைப்பினர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்’ என ஹமாஸ் அமைப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடக்கிறது. எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே, 42 நாட்களுக்கு போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன்படி, ஒவ்வொரு கட்டமாக பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்த பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்யப்பட்டனர். போர் நிறுத்தத்தின்படி, பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்து வருகிறது.
இந்நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: காசா போர் தொடர்பாக இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒரு பொதுவான உத்தியை கொண்டுள்ளது. அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்காவிட்டால், ஹமாஸ் அமைப்பினர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும்.
காசாவில் ஹமாஸின் ராணுவத் திறனையும், அதன் அரசியல் ஆட்சியையும் நாங்கள் ஒழிப்போம். எங்கள் அனைத்து பிணைகைதிகளையும் வீட்டிற்கு அழைத்து வருவோம்.காசா மீண்டும் ஒருபோதும் இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.-