
இந்தியாவின் உயர்தர பருத்தியை, சர்வதேச சந்தைகளில் முன்னிலைப்படுத்த ‘கஸ்துாரி காட்டன்’ என்ற, ‘பிராண்ட்’ மேம்பாட்டுக்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
உயர் தர பருத்தி ஆடை அணிவதை பல்வேறு நாடுகளிலும் மக்கள் விரும்புகின்றனர். தாங்கள் விளைவிக்கும் பருத்தியின் தரத்தை சந்தைப்படுத்தும் வகையில், பிரத்யேக பிராண்ட் பெயரை உருவாக்கியுள்ளன. அதேபோல, இந்தியாவில் விளையும் உயர்தர பருத்தியை பிரத்யேகமாக முன்னிலைப்படுத்த, ‘கஸ்துாரி காட்டன்’ என்ற பிராண்டை முன்னிலைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
விதைத்தேர்வில் துவங்கி, சாகுபடி செய்யப்படும் நிலத்தின் தன்மை, விளைவிக்கப்பட்ட மாவட்டம் மற்றும் மாநிலம், பருத்தியின் தன்மை என, அனைத்து விபரங்களையும் ஆராய்ச்சி செய்து, பிரத்யேகமாக கஸ்துாரி காட்டன் என்ற சான்றிதழ் வழங்கப்படும் என, ஜவுளித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

வர்த்தக ஆலோசகர் சபரி கிரீஷ் கூறியதாவது: அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகள், சீனாவின் ஜிங்ஜியான் மாகாணத்தில் விளையும் பருத்தி கொள்முதலுக்கு தடை விதித்துள்ளன. உலக அளவில், இந்திய பருத்தி தரமானது என்றாலும், அதை ஆவணப்படுத்தும் பிராண்ட் உருவக்கப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு முன், கஸ்துாரி காட்டன் என்ற பெயரில் பிராண்ட் உருவாக்க அரசு திட்டமிட்டது. பட்ஜெட்டில் அறிவித்துள்ள பருத்திக்கான ஐந்தாண்டு திட்டத்தின் வாயிலாக, இந்தியாவில் விளைவிக்கப்படும் உயர்தர பருத்தியை, இந்த பெயரில் முன்னிலைப்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றார்.