
சென்னையில் வீட்டில் கேஸ் சிலிண்டரை மாற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்த மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 62), கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி(57). வீட்டு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கேஸ் தீர்ந்து விட்டதால். புது சிலிண்டரை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டுள்ளது. பூஜை அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் குபீரென தீப்பற்றியது. இதில் வீரக்குமார் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்களைக் காப்பாற்ற முயன்ற மருமகன் குணசேகரனும் தீக்காயம்(40) அடைந்தார். ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரும் அடுத்தடுத்து சிகிச்சை பலியின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வியாசர்பாடியை சேர்ந்த குணசேகரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் கலெக்ஷன் ஏஜெண்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஆனந்தியும் நுங்கம்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தினமும் இருசக்கர வாகனத்தில் மனைவியை அவரது நிறுவனத்தில் வேலைக்கு விட்டு விட்டு, தன்னுடைய வேலைக்கு செல்வதை குணசேகரன் வழக்கமாக கொண்டவர். கலெக்ஷன் வேலை முடிந்ததும் வழக்கமாக வைகுண்டபுரத்தில் மாமனார் வீட்டில் காத்திருந்து, மனைவி ஆனந்தி வேலை முடிந்து வந்ததும் அவரை அழைத்துச் செல்வார். சம்பவம் நடந்த போதும் மாமனார் வீட்டுக்கு வந்து மனைவிக்காக காத்திருந்துள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. குணசேகரன்- ஆனந்தி தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தங்களுக்கு அரசு உதவ முன் வரவேண்டும் என குணசேகரனின் மனைவி ஆனந்தி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.