
ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை, திண்டுக்கல்லில் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஈரோட்டைச் சேர்ந்த 26 வயது பெண், தூத்துக்குடியில் இருந்து ஈரோட்டுக்குச் செல்ல ஓகா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித் துள்ளார்.
அதே ரயிலில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தொழிலாளி சதீஷ் குமார் (30) என்பவர் பெயின்டிங் வேலைக்காக கோயம்புத்தூர் செல்வதற்கு விருதுநகர் ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார். நேற்று அதிகாலை இந்த ரயில், திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது மதுபோதையில் இருந்த சதீஷ்குமார், அப்பெட்டியில் பயணித்த 26 வயது பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.
இதையடுத்து, அப்பெண் ரயில் பெட்டியின் உட்புறத்தில் ஒட்டப் பட்டிருந்த உதவி எண்ணுக்கு தொடர்புகொண்டு, தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர் குறித்து புகார் அளித்தார். அப்போது, ரயில் கொடை ரோடு ரயில் நிலையத்தை கடந்து சென்றுகொண்டிருந்ததால், புகார் குறித்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து திண்டுக்கல் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த ரயில் திண்டுக்கல்லை அடைந்த போது, அங்கு தயாராக இருந்த திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீஸார், அந்த பெண் புகாரில் குறிப்பிட்ட பெட்டியில் ஏறினர். அங்கு, பாலியல் தொல்லை அளித்த சதீஷ் குமாரை பிடித்து, திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.