
தமிழக அமைச்சரவை கூட்டம், இன்று முதல்வர் தலைமையில் நடந்தது. துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.அமைச்சர் கூறியதாவது: சென்னையைச் சுற்றியுள்ள பெல்ட் ஏரியா எனப்படும் 4 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் 32 கி.மீ., தொலைவுக்குள் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட ஆண்டுகளாக பட்டா பெற முடியாமல் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. சென்னையில் மட்டும் 29,187 பேர் ஆட்சேபனை இல்லாத புறம்போக்குகளில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு எல்லாம் 6 மாதத்திற்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக மாவட்ட மற்றும் மாநில அளவிலான ஒரு குழுவை அமைக்க உத்தரவிட்டுள்ளார். சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்ட மக்களுக்கு இது வரப்பிரசாதமாகும். மதுரை, நெல்லை போன்ற பிற மாநகராட்சிகளிலும் இது போன்ற பிரச்னைகள் நிலவுகிறது. மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகர் பகுதிகளில் வசிக்கும் 57,084 பேருக்கும் பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
ஏறத்தாழ 86 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் தீர்மானத்தை இன்றைய அமைச்சரவையில் முடிவெடுத்து, 6 மாதத்தில் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதில், பட்டா கோரி விடுபட்டவர்கள் விண்ணப்பித்தால், அதனையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு இதுவரையில் பட்டா வழங்கியுள்ளோம். 6 லட்சத்து 29 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கும் பணியும் செய்து வருகிறோம்.
அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பட்டா கோரி விண்ணப்பிக்கலாம். தேவைப்பட்டால், தாலுகா வாரியாக முகாம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.