
படத்தின் முதல் பாகம் வெளிவராத சூழ்நிலையில், நேரடியாக இரண்டாம் பாகமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. மதுரையில் மிகப்பெரிய ரவுடிகளாக வலம் வரும் சூரஜ் வெஞ்சர மூடு மற்றும் அவரது தந்தை மாருதி பிரகாஷ்ராஜ் இருவரும் மிகப்பெரிய சிக்கலை எதிர்கொள்கிறார்கள்.
இவர்கள் மீதான பழைய பகை காரணமாக ஊர் திருவிழாவின்போது இருவரையும் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார் போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யா. இந்த சிக்கலில் இருந்து தங்களை காப்பாற்ற அந்த ஊரில் மளிகை கடை நடத்தி வரும் விக்ரமின் உதவியை நாடுகிறார் மாருதி பிரகாஷ்ராஜ்.
அடிதடியை மறந்து அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் விக்ரமும் உதவி செய்ய, ஒரு கட்டத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் மாருதி பிரகாஷ்ராஜிடம் சிக்கி அவதிப்படுகிறார். விக்ரமின் குடும்பத்தை பகடைக்காயாக வைத்து இரு தரப்பினரும் ஆடுபுலி ஆட்டம் ஆடுகிறார்கள்.
மாருதி பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது எஸ்.ஜே.சூர்யாவுக்கு உள்ள பகை என்ன? ரவுடிகளே மிரண்டு போகும் அளவு விக்ரமின் முந்தைய வரலாறு என்ன? இறுதியில் யார் யாரை வென்றார்கள்? என்பதே படத்தின் மீதி கதை. நடுத்தர குடும்பஸ்தனாக யதார்த்தமான நடிப்பால் விக்ரம் கவர்கிறார்.
அவரது இன்னொரு முகம் அதிரடி திருப்பம். பக்கா கமர்சியல் நாயகனாக எல்லா பந்துகளிலும் சிக்ஸர் அடித்து வியக்க வைக்கிறார் சீயான். ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பால் ரசிக்க வைக்கிறார் துஷாரா விஜயன். காதல் காட்சிகளில் வெளுத்து கட்டியுள்ளார். விக்ரம் – துஷாரா விஜயன் திருமண காட்சிகள் உயிர்ப்பு.
வன்மத்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பயத்தை விதைத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா. அவரது நடிப்பு படத்துக்கு மிகப்பெரிய பலம். மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் மாருதி பிரகாஷ்ராஜ், உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்கள்.
பாலாஜி, ரமேஷ் இந்திரா, மாலா பார்வதி, ஸ்ரீஜா ரவி என அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களில் நிறைவை கொடுத்து இருக்கிறார்கள்.தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது. சண்டை காட்சிகளில் நாலாபுரம் கேமராவை திருப்பி வியக்க வைத்துள்ளார். ஆக்சன் பிரியர்களுக்கு அதிரடி விருந்து. ஜி.வி. பிரகாஷின் இசை ஆட்டம் போட வைக்கிறது.
பின்னணி இசையிலும் தெறி பிளாஷ்பேக் காட்சிகளின் நீளம், இரண்டாம் பாதியில் வேகம் குறைவு போன்றவை பலவீனமாக இருந்தாலும், உயிரோட்டமான திரைக்கதை படத்துக்கு வலுசேர்க்கிறது.வழக்கமான பழிவாங்கல் கதை என்றாலும் யதார்த்தமான, யாரும் யூகிக்க முடியாத காட்சிகளை புகுத்தி, ஒரே இரவில் நடக்கும் திரைக்கதையாக எழுதி மீண்டும் இயக்குனராக தனது படைப்பில் வெற்றி கண்டுள்ளார் எஸ்.யூ.அருண்குமார். இடைவேளை காட்சி சிலிர்ப்பு.