
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதற்குப்பின் ‘ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார். இவரது நடிப்பில் வெளியான ‘அயோத்தி’ ‘கருடன்’, ‘நந்தன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அதனை தொடர்ந்து அபிஷன் இயக்கத்தில் ‘டூரிஸ்ட் பேமிலி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. மேலும், ராஜு முருகன் இயக்கத்தில் ‘மை லார்ட்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான சசிகுமார் கிரைம் திரில்லர் வெப் தொடர் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2022-ம் ஆண்டு அமேசான் பிரைம் ஓ.டி.டி.யில் வெளியான ‘வதந்தி’ வெப் தொடரின் இரண்டாவது சீசனில் நடிக்க உள்ளார்.
வதந்தி தொடரின் முதல் சீசனில், எஸ்.ஜே.சூர்யா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் லைலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த தொடர் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது உருவாக உள்ள 2-வது சீசனில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த சீசன் கிரைம் திரில்லர் பாணியில் சுவாரஸ்யமான கதையில் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.