
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். ஜி.வி.பிரகாஷ் – சைந்தவிக்கு அன்வி என்ற மகள் உள்ளார். கடந்த 12 வருடங்களாக ஒன்றாக இருந்த இருவரும் தங்களது குடும்பத்தாருக்கு இடையே எழுந்துள்ள பிரச்சினையால் ஏற்கனவே சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகத் தெரிகிறது.
மேலும் இருவரும் பிரிவதாக அறிவித்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பரம் விவாகரத்து கோரி இன்று மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி செல்வ சுந்தரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி. பிரகாஷ், சைந்தவி, இருவரும் நேரில் ஆஜராகி, இருவரும் மனமுவந்து பிரிவதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்ட பின் இருவரும் ஒரே காரில் புறப்பட்டுச் சென்றனர்.
பிரிவதாக அறிவித்தாலும், சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் இசையில் அடுத்ததாக அஜித்தின் “குட் பேட் அக்லி”, தெலுங்கில் “ராபின்ஹூட்” போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.