
சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது இரண்டாவது போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, நாளை காலை 10.15 மணிக்கு தொடங்கும் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மைதானத்தில் அமரும் இடத்திற்கு ஏற்றவாறு, ரூ.1700, ரூ.2500, ரூ.3500, ரூ.4000, ரூ.7500 என 5 வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. சிஎஸ்கேவின் இணையதளம் வாயிலாக மட்டுமே டிக்கெட் விற்பனை நடைபெறும் எனவும், ஒரு நபருக்கு அதிகபட்சம் 2 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பல ரசிகர்களும் டிக்கெட்டுகள் கிடைக்காமல் ஏமாற்றமடையும் நிலையில், சுமார் 15,000 டிக்கெட்டுகள் மட்டுமே ஆன்லைனில் விற்பனைக்கு வரும் என சென்னை நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரசிகர்களால் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியைக் காண பல லட்சக்கணக்கான ரசிகர்கள் போட்டி போடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.