
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ஐபிஎல் தொடர் இன்று முதல் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
நடப்பு சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் உத்வேகத்தோடு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், முதல் கோப்பைக்கான தேடலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் களமிறங்குகின்றன. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி, நீண்ட நாட்களுக்குப் பிறகு டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார். போட்டி கொல்கத்தாவில் நடைபெறுவதால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இரண்டு அணிகளுக்கும் புதிய கேப்டன்கள் என்பதால், போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் முதல் போட்டிக்கு முன்பு சினிமா நட்சத்திரங்கள் திஷா பதானி, ஸ்ரேயா கோஷல் உள்ளிட்டோரின் பிரம்மாண்டமான கலைநிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
போட்டி மற்றும் கலைநிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்க, கொல்கத்தா நகரில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் “ஆரஞ்சு அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால், போட்டி திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நேற்று இடைவிடாமல் மழை பெய்ததால் வீரர்கள் பயிற்சியிலும் ஈடுபடவில்லை.
போட்டி தொடங்கும் நேரமான இரவு 7.30 மணிக்கு 45 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பும், இரண்டாவது இன்னிங்ஸின் போது 65 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
பொதுவாக ஆண்டுதோறும் ஐபிஎல்லின் தொடக்க போட்டியில் மட்டும் நடைபெறும் தொடக்க விழா, இம்முறை ஒவ்வொரு அணியின் முதல் போட்டியின் போதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை போட்டிக்கு முன்பாக நடைபெறும் தொடக்க நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் அனிருத்தின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சிக்காக ரசிகர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர்.
மேலும், வார இறுதி நாட்களில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை பெரிய திரைகளில் ரசிகர்கள் கண்டுகளிக்கும் வகையில் ‘Fan Park’ பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை நகரங்களில், குறிப்பிட்ட சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் பெரிய திரைகளில் ரசிகர்கள் போட்டிகளை கண்டு மகிழலாம்.