
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
‘லூசிபர்’ படத்தின் 2வது பாகமான ‘எல் 2 எம்புரான்’ படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. எம்புரான் திரைப்படம் வரும் 27ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மேலும், ஐமேக்ஸ் தரத்தில் வெளியாகும் முதல் மலையாளப் படமென்பதால் ரசிகர்களுக்கு ஆவல் அதிகரித்துள்ளது. மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் முன்பதிவு தொடங்கிய நிலையில் திரிசூரில் மோகன்லால் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஏற்கனவே, புஷ்பா பட வெளியீட்டின்போது அல்லு அர்ஜுனை பார்க்க சென்ற கூட்ட நெரிசலில் ஒரு பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.