
கடந்த பிப்ரவரி மாதம் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபாமா பரமேஸ்வர், இவானா ஆகியோர் நடித்த படம் தான் டிராகன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்த நிலையில் பல கோடி லாபம் பார்த்துள்ளது. இந்த சூழலில் டிராகன் படத்தில் ஐந்து இயக்குனர்கள் ஒன்றாக நடித்திருந்தனர். அதாவது படத்தின் இயக்குனரான அஸ்வத் மாரிமுத்து கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இயக்குனர்கள்.
இதுதவிர கேஎஸ் ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஸ்கின் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இவ்வாறு ஒரே படத்தில் ஐந்து இயக்குனர்கள் சங்கமித்திருக்கின்றனர்.
ஆனால் இது என்ன பிரமாதம் ஒரே படத்தில் 10 இயக்குனர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான படம் தான் மாயாண்டி குடும்பத்தார். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.
இதில் பொன்வண்ணன், மணிவண்ணன், சீமான், ஜெகன்நாத், தருண் கோபி, ஜி எம் குமார், ரவி மரியா, ராஜ்கபூர், சிங்கம் புலி மற்றும் நந்தா பெரியசாமி என பத்து இயக்குனர்கள் ஒன்றாக நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்தை எஸ்கே செல்வகுமார் தயாரித்திருந்தார். இவ்வாறு 10 இயக்குனர்கள் இந்த படத்தில் நடித்தது பிரமிக்க வைத்தாலும் படமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.