
ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து அவரது மனைவி சாய்ரா பானு பதறிப்போய்விட்டார். அதனை தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தன்னை யாரும் ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்ல வேண்டாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இசைப்புயல் என உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் கிராமி விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை அள்ளி இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இசைத்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளார். ரோஜா படத்தில் ஆரம்பித்த அவரது பயணம் காதலிக்க நேரமில்லை படத்தை எல்லாம் தாண்டி ரசிகர்களை இன்னமும் இழு இழுவென இழுத்துக்கொண்டு தான் இருக்கிறது.
ஏ.ஆர். ரஹ்மானுக்கு திடீரென நெஞ்சுவலி என்றதுமே உள்ளூர் மீடியா முழுவதும் உலகளவில் பல மீடியாக்கள் அவர் விரைவில் குணமாக வேண்டும் என செய்திகளை போட ஆரம்பித்தன. சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்காக பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் மனைவி வெளியிட்டுள்ள அறிக்கை ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
58 வயதாகும் ஏ.ஆர். ரஹ்மான் ஓய்வின்றி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது புதுப்படங்களுக்கு இசையமைப்பது என செம எனர்ஜியுடன் உழைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு சிறிதாக உடல் பாதிப்பு ஏற்பட்டது என்றும் பெரிய பிரச்னை எல்லாம் இல்லை என ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அப்பா நலமுடன் உள்ளார் என்றும் அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார் என்றும் தெரிவித்து ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளார்.
பாலிவுட்டில் அமீர்கான் தனது 2வது மனைவியை பிரிந்ததும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதைவிட தமிழ் சினிமாவில் சமந்தா, தனுஷ், ஜெயம் ரவி, ஜி.வி. பிரகாஷ் குமார் என வரிசையாக பல பிரபலங்கள் விவாகரத்து செய்து பிரிந்தது ரசிகர்களை ஷாக் ஆக்கினாலும், ஏ.ஆர். ரஹ்மான் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வந்த நிலையில், அவரை பிரிகிறேன் என அறிவித்தது ரசிகர்களின் இதயங்களை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தில் தான் ஏ.ஆர். ரஹ்மானை பிரிகிறேன் என்றும் சாய்ரா பானு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானுக்கு உடல்நலம் சரியில்லை என்பதை அறிந்ததும் துடித்துப் போய்விட்டார் சாய்ரா பானு தனது கணவருக்கு ஒன்றும் ஆகாது என்றும் அவருக்காக எப்போதுமே பிரார்த்தனை செய்து வருகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது குறிப்பில் தன்னை யாரும் ஏ.ஆர். ரஹ்மானின் முன்னாள் மனைவி என அழைக்க வேண்டாம் என்றும் சட்டப்படி நாங்கள் இருவரும் இன்னமும் பிரியவில்லை என்றும் அதுவரை நாங்கள் இருவரும் கணவன் – மனைவி தான் என்றும் குறிப்பிட்டு இருப்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு மீண்டும் பழையபடி இணைய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்குப்பேர்தான் தான் ஆடாவிட்டால் தன் தசை ஆடும்னு சொல்வாங்க என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.