
விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 2023ஆம் வருடம் டிசம்பர் மாதம் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் சோகத்தில் தள்ளியது. அவர் இருந்தவரை எத்தனையோ பேர் அவரால் பயன் அடைந்திருக்கின்றனர். சாமானியர்கள் முதல் பிரபலங்கள்வரை அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்லும். அந்த அளவுக்கு அவர் ஓடி ஓடி உதவி செய்தார். மேலும் அவரை கறுப்பு எம்ஜிஆர் என்றும் அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைத்ததுண்டு. இந்நிலையில் அவர் குறித்து பிரபல நடிகர் சோனு சூட் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜயகாந்த் இந்தப் பெயரை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. சினிமாவில் நுழைந்து தனக்கான தனித்த உடல் மொழி, ஸ்டைல், வசன உச்சரிப்பு, நடிப்பு என அனைத்திலும் முத்திரை பதித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோர் பீக்கில் இருந்தபோது சினிமாவுக்குள் நுழைந்து தனக்கென தனி ரசிகர் படை சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கியவர் விஜயகாந்த். முக்கியமாக கிராமங்களில் தனக்கான ரசிகர்களை அதிகளவு உருவாக்கி வைத்திருந்தார். அவ்வாறு அவர் அப்படி செய்தது சாதாரண விஷயமில்லை என்பது பலரும் ஒத்துக்கொண்ட உண்மை.
ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். கேப்டன் என்ற பட்டத்துக்கு உரிய முறையில் பல விஷயங்களை தனியாளாக வழி நடத்தியவர் அவர். சிவாஜியின் இறப்பில் கூட்டத்தை ஒற்றை ஆளாக கட்டுப்படுத்தியது, ஏதேனும் பிரச்னை என்றால் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் முதல் ஆளாக களத்தில் குதிப்பது, நட்சத்திர கலை விழாவை திறம்பட நடத்தி காண்பித்தது என அவர் உண்மையில் கேப்டன்தான் என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறிவருகிறார்கள்.
சினிமாவில் கலக்கிவந்த விஜயகாந்த் அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். ஆனால் அரசியல் தளத்தில் அவருக்கு சில துரோகங்கள் நிகழ்த்தப்பட்டன. அது விஜயகாந்த்துக்கு ரொம்பவே மன உளைச்சலை கொடுத்தது. இதனையடுத்து அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி முழு ஓய்வு பெற்றார். பிறகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 2023ஆம் வருடம் உயிரிழந்தார்
விஜயகாந்த் பலருக்கு பல உதவிகளை செய்திருக்கிறார். அவரிடம் உதவி பெற்றவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். அந்த லிஸ்ட்டில் இப்போது டாப் ஹீரோக்களாக இருக்கும் விஜய், சூர்யாகூட இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஏராளமான செலிபிரிட்டிகளும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடி ஓடி உதவி செய்தார் விஜயகாந்த். நடிகர் ஷாம் ஒரு பிரச்னையில் இருந்தபோதுகூட அவரை காப்பாற்றியது விஜயகாந்த் மட்டும்தான். அதேபோல் படப்பிடிப்புக்காக மைசூருக்கு சென்றிருந்தபோது வாட்டாள் நாகராஜ் ஆட்களை தைரியமாக எதிர்கொண்டு தான் ஒரு தைரியசாலி என்பதையும் நிரூபித்தவர்.
இந்நிலையில் பிரபல நடிகர் சோனு சூட் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் விஜயகாந்த் குறித்து பேசுகையில், “கள்ளழகர் படத்துக்கு நான் சரியாக இருப்பேன் என விஜயகாந்த் முடிவெடுத்தார். எனக்கு சினிமா சண்டை போட தெரியாது என்பதை தெரிந்துகொண்டு நான் கற்றுக்கொள்வதற்காக ஷூட்டிங்கை ஒரு மாதத்துக்கு தள்ளி வைத்தார். அவருடைய கவனிப்பில் முதல் படத்தின்போதே ராஜ மரியாதை பெற்றவன் நானாகத்தான் இருப்பேன். அவரிடம் நான் மொழி கடந்த ஒரு அன்பினை பார்த்தேன். நானும் அவரை உபசரிப்பில் ஃபாலோ செய்கிறேன். எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே அவர்தான். விஜயகாந்த் கடவுளின் குழந்தை” என்றார்.