
இந்த வாரம் தமிழ் சினிமாவில் 10 படங்கள் வெளியாகி உள்ளன. அதில், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ரஜினி முருகன் உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்களும் அடங்கும். கடந்த ஆண்டு பல ரீ ரீலீஸ் படங்களை திரையிட்டு தியேட்டர் ஓனர்கள் சமாளித்தனர்.
எதிர்பார்க்காத விதமாக சில படங்கள் மிகப் பெரிய வசூல் வேட்டையும் நடத்தியது. இந்த வாரம் வெளியான 10 படங்களில் குறைந்தபட்சம் வசூலை ஈட்டிய படங்களாக இரண்டு படங்கள் உள்ளன. ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் மற்றும் வைபவ், சுனில் ரெட்டி நடிப்பில் வெளியான பெருசு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு மத்தியில் தான் பாக்ஸ் ஆபிஸ் போட்டி நடைபெற்றது.
இதில் ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் படத்தை வசூலில் பெருசு திரைப்படம் முந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. பெருசு திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த நிலையில், ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் நடிப்பில் நேற்று வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் இளைஞர்களை டார்கெட் செய்து வெளியான நிலையிலும், குறிப்பிட்ட ஆடியன்ஸை அந்த படம் கவரவில்லை. முதல் நாளில் அதிகபட்சமாக 30 முதல் 40 லட்சம் வரை மட்டுமே இந்த படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வைபவ் மற்றும் சுனில் ரெட்டியின் நடிப்பில் இளங்கோ ராம் இயக்கத்தில் அடல்ட் காமெடி படமாக உருவாகியுள்ள பெருசு திரைப்படத்துக்கு காலை முதல் பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்த நிலையில், மாலை மற்றும் இரவு காட்சிகள் சற்று நிரம்பின. அதன் காரணமாக அதிகபட்சமாக 60 முதல் 70 லட்சம் ரூபாயை முதல் நாளில் அந்த படம் வசூல் செய்துள்ளது. இதன் காரணமாக ரியோ ராஜின் ஸ்வீட் ஹார்ட் படத்தை வசூல் ரீதியாக முதல் நாளில் பெருசு திரைப்படம் முந்தி இருக்கிறது.
இந்த இரண்டு படங்களுமே குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படங்கள் என்றாலும் இந்த படங்களை தாண்டி இந்த வாரம் வருணன், டெக்ஸ்டர், ராபர், கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல், குற்றம் குறை, மாடன் கொடை விழா உள்ளிட்ட படங்களும் வெளியாகி உள்ளன. ஆனால், படத்தை பார்க்க தியேட்டர்களில் தான் ரசிகர்கள் கூட்டம் வராமல் காத்து வாங்குகிறது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான ஸ்வீட் ஹார்ட் திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை. ஆனால், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான பெருசு திரைப்படம் போட்ட காசை எடுத்து விடுவார்கள் என்றே பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எந்த படம் அதிக அளவில் ரசிகர்களை கவர்கிறது மற்றும் முதல் வார முடிவில் யார் பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டுகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த மாத இறுதியில் சீயான் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் மட்டுமே தமிழ் சினிமாவில் தியேட்டர்களை நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கலான் திரைப்படம் சொதப்பியது போல, இந்த முறை விக்ரமுக்கும் அவரது கடுமையான உழைப்புக்கும் சோதனை ஏற்படாது என்கின்றனர்.